2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நல்லாட்சியின் 3ஆம் ஆண்டில் பலம்மிக்க இலங்கை

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.பி.மதன்

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் “பலம்மிக்கதோர் இலங்கை” என்னும் தூரநோக்குடைய பொருளாதாரத் திட்டத்தினை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாட்டினுடைய தூரநோக்கு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, பிரதான இரண்டு பொருளாதார வாயில்கள் நிறுவப்படவுள்ளன.  தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பொருளாதார வாயில்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தென்மேற்கு பொருளாதார வாயிலூடாக மேற்கு, வடமேல், மத்தி, தெற்கு மற்றும் சப்ரகமுவ பிரதேசங்களுக்குரிய மாகாண, மாவட்ட வாழ் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. வடகிழக்கு பொருளாதார வாயிலூடாக வடக்கு, வடமத்தி, கிழக்கு மற்றும் தென்மேற்குப் பிரதேச மக்கள் நன்மையடையவுள்ளனர். இதேவேளை, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களை உள்ளடக்கிய மலைநாட்டு உப பொருளாதார வாயிலொன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டங்களினூடாக, நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளான தனிநபர் வருமான அதிகரிப்பு, அனைவருக்கும் தொழில் வாய்ப்பு, வீட்டுத்திட்டம், நாடுபூராக இலவச இணைய சேவை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புரட்சி, சர்வதேச ரீதியாக பலமான போட்டிமிக்க சமூக சந்தைப் பொருளாதார முறைமையொன்றை உருவாக்குதல் போன்றன சாத்தியமாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பிரதான அபிவிருத்திக் கருத்திட்டமாக இலகு சுற்றுலாப் படகுகள் மற்றும் சிறிய படகுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் யாழ்ப்பாணம் சார்ந்த பிரதேசங்களுக்கு வழங்குதல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, பரந்தன் மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் இலகு கைத்தொழில் அபிவிருத்தி, பலாலி விமானநிலைய அபிவிருத்தி, வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை என்பன திட்டமிடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைத் துறைமுகத்தினை நவீனமயப்படுத்தல், வணிக நடவடிக்கைகளுக்காக ஒலுவில் துறைமுகத்தைத் திறந்து வைத்தல், நிலாவெளி - அறுகம்பை சுற்றுலப் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்தல் என்பன பிரதான இடம்பிடிக்கவுள்ளன.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் மேற்படி “பலம்மிக்கதோர் இலங்கை” எனும் தூரநோக்குடைய பொருளாதாரத் திட்டத்தினை, முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரத்தை 1.5 மில்லியன் சனத்தொகை மிக்கதாக விரிவுபடுத்தவும் ஓர் அடிப்படையை உருவாக்கி, கண்டி நகரத்தினை நவீன உட்கட்டமைப்பு வசதிகள், சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் நிறைந்த ஓர் இடமாக மாற்றப்படும்.

கொழும்பு துறைமுகத்துக்கருகில் உருவாக்கப்படும் சர்வதேச நிதியியல் நகரத்தினை தொழில்நுட்ப வழங்கல் மற்றும் நிதியியல் சேவைகள் தொடர்பான பிராந்தியத்தின் முக்கிய மத்திய நிலையமாக மாற்றப்படவுள்ளது.

பெருந்தோட்டத்துறை மறுசீரமைப்புச் செய்யப்படுவதுடன் உயர் உற்பத்தித்திறன் மிக்க பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரதேச விவசாயப் பயிர் ஏற்றுமதித் தரத்திலான பயிர் உற்பத்திகளை வழங்கும் நிலைமைக்கு மாற்றப்படும்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி நகரங்களைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சூழவுள்ள இடங்களில் வீடமைப்புத் திட்டம் மற்றும் மீள் கட்டுமானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .