2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நல்லாட்சியில் இணையும் விவகாரம்: ஈ.பி.டி.பி; இ.தொ.கா விளக்கம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி  

நல்லாட்சி அரசாங்கத்துடன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி தொடர்பில், அவ்விரு கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. 

இந்தச் செய்தி தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில்,  “அமைச்சுப் பதவியொன்றை ஏற்பதையோ அல்லது நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதையோ நான் தற்போதைக்கு விரும்பவில்லை. 

“எனக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. வெளியில் இருந்துகொண்டுதான் செய்ய விரும்புகிறேன் என்று, ஏற்கெனவே நான் கூறியிருக்கின்றேன். அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவளிப்பது என்பது வேறு. ஆனால், இணைந்து செயற்பட முடியாது.  

“விமர்சனத்துடனான ஆதரவைத் தான், நான் வழங்க விரும்புகின்றேனே ஒழிய, தற்போதைக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை. அமைச்சுப் பதவியையும் நான் விரும்பவில்லை” என்றார்.  

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,  

“எங்களுக்கும் இதுவொரு செய்திதான். இதில் எந்தவோர் உண்மையும் இல்லை. இதுதொடர்பான எவ்வித அறிவித்தல்களும் எனக்குக் கிடைக்கவில்லை” என்றார்.  

கடந்த, வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது, ஈ.பி.டி.பியும் இ.தொ.காவும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையினால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், இந்த சிறுபான்மையினக் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவியை வழங்கவுள்ளதாக, அண்மையில் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

எனினும், அரசியலமைப்புக்கு அமைய மேலதிகமாக அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது என்ற காரணத்தினால், இந்த அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .