2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பசிலுக்கு பிணை: யோஷிதவுக்கு இல்லை

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவிநெகும திணைக்கள நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளிலும் தலா 50 இலட்சம் ரூபாய் காசுப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க, நேற்று வியாழக்கிழமை (10) அனுமதி வழங்கினார்.

இதேவேளை, சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட சந்தேகநபர்கள் ஐவரையும் பிணையில் விடுவிக்க மறுத்த கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால, அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்கவும் உத்தரவிட்டார்.

திவிநெகும நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பசில் உட்பட மூவரதும் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்த கொழும்பு மேல்நீதிமன்றம்,  அவர்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் கட்டளையிட்டதுடன், அவர்கள் மீதான வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.

இவர்கள் மூவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்றைய தினத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை, சீ.எஸ்.என் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, அஷான் ரவிநாத் பெர்ணான்டோ, கவிஷான் திஸாநாயக்க ஆகியோர் தொடர்பான வழக்கு, நேற்றைய தினத்தில் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதுடன், அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .