2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘பிரேரணைக்குப் பின்னரே நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

அரசியல் கைதிகள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னரே, அது தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியுமென, ஜே.வி.பி தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் ஜே.வி.பி உறுதியாகவுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.  

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் போன்ற சில காரணிகளை எதிர்த்து முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு, ஆதரவு கோரி ஜே.வி.பின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி குழு, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளது.  

 இதன்போது, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், கூட்டமைப்பு கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

 “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் சரியான நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளோம். அந்த அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்களுக்கு விரைவாக வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.  

 “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளும், கட்சியில் தலைவ​​ர் மற்றும் பிரதான கட்சியில் பிரதித் தலைவர் பதவிகள் வழங்கப்பட முடியுமாக இருந்தால், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியாமல் இருந்தால் சிறிய குற்றங்களுக்காக, இவர்கள் எவ்வாறு தடுத்து வைக்கப்பட முடியும்” என்றும் வினவினார்.  

 “எனவே, அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன், அதற்கான அழுத்தத்தை ஜே.வி.பி தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு கொடுக்கும். அதேநேரம், அரசியல் கைதிகள் தொடர்பாக பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்ததன் பின்னர், அதுதொடர்பிலான எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .