2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

போராட்டக்காரர்களை இரவோடு இரவாக பந்தாடிய படையினர்

Freelancer   / 2022 ஜூலை 23 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய பாராளுமன்ற வளாகத்துக்குள் திடீரென திமுதிமுவென ஆயுதங்களுடன் உள்நுழைந்த பொலிஸாரும், படையினரும், ஜனாதிபதி வளாகத்தில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், ஜூலை 22 நள்ளிரவைத் தாண்டி படையினரால் ஆரம்பிக்கப்பட்ட அதிரடித் தாக்குதல், நேற்று (22) அதிகாலை 3 மணிவரையிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதி பெரும் களேபர பூமியாக காட்சியளித்தது.

சம்பவத்தை கேள்வியுற்று, ஸ்தலத்துக்கு விரைந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் சரமாரியான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். சிலரின் கமெராக்களை உடைக்கவும் முயற்சித்தனர்.

'எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் போய்விடுகின்றோம்' என கத்தி மன்றாடிய போதிலும், பெண் போராட்டக்காரர்கள் என்றுகூட பார்க்காமல் முதுகு, கைகள், கால்களில் அச்சு பதியும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். அத்துடன் காயங்களையும் ஏற்படுத்தினர்.

அவ்விடத்தை விட்டு  நேற்று (22) நண்பகலுடன் அகன்று சென்றுவிடுவதாக, ஜூலை 21 ஆம் திகதியன்றே கோட்டை பொலிஸாருக்கு எழுத்துமூலமாக உறுதியளித்த போராட்டக்காரர்கள், கடிதத்தையும் கையளித்திருந்தனர்.

எனினும், நடுநிசியில் உள்நுழைந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர், சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதல்களை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச இராஜதந்திரிகள் 'மிலேச்சத்தனமான தாக்குதல்' என வன்மையாக கண்டித்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர், அப்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த படையினர், அங்கிருந்தவர்கள் வெளியே செல்லமுடியாத வகையில் தடைகளை ஏற்படுத்தி, கடுமையான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் என தெரியவருகின்றது.

படையினரால் பலரும் பிடித்துச் செல்லப்பட்டனர் என்றும், அவ்வாறானவர்கள் என்ன நடந்ததென தெரியவில்லையென போராட்டக்காரர்கள் அங்கலாய்கின்றனர்.

எனினும், போராட்டக்காரர்கள் ஒன்பது கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நேற்று (22) காலை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

நடுநிசியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் காயமடைந்தவர்களை, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதைக்கூட அங்கிருந்த படையினர் தடுத்தனர். எனினும், ஒருசிலரை மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்க முடிந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை கேட்டு, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பலரும் பல வழிகளின் ஊடாகவும் படையெடுத்தனர். எனினும், எந்த பக்கத்திலிருந்தும் உள்நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பெருந்திரளான பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

'கோட்டா கோ கம' மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவே முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த கமவுக்கு எவ்விதமான சேதங்களும் விளைவிக்கவில்லை. அத்துடன், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் எந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் கேட்டறிந்து கொள்வதற்காக, சட்டத்தரணிகளும் நேற்றுக்காலையிலேயே ஸ்தலத்துக்கு விரைந்தனர்.

எனினும், அங்கிருந்த பொலிஸார், சட்டத்தரணிகளின் கேள்விகளுக்கு எவ்விதமான பதிலை வழங்கவில்லை. இந்நிலையில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, நேற்று (22) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X