2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மகாபொல சீ்ட்டிழுப்பில் 75 கோடி ரூபாய் நட்டம்

Editorial   / 2025 ஜூலை 14 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023இல் ஒப்பந்த அடிப்படையில் 2 வருடங்களுக்கு வர்த்தக கண்காட்சி உத்தியோகத்தர்களை நியமித்தல், நிகழ்நிலை சீட்டிழுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டிழுப்பாளர் அதிலிருந்து விலகியமை காரணமாக மகாபொல நிதியத்திற்கு 750 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடாத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கோப் குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. .

மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும், அதனை மகாபொல நிதியத்தினால் நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அறிவுறுத்தியது.

 

இதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஈ.விமலேந்திர ராஜா மற்றும் மகாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்கொட ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.

 

லலித் அத்துலத்முதலி மகாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கடந்த 09ஆம் திகதி கோப் குழுவில் ஆராயப்பட்டபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

 

2015ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்போதிருந்த அமைச்சரின் ஒப்புதலுடன் குறித்த சொத்து கையகப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது என்பது குறித்து இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்காக ரூ.408 மில்லியன் SLIIT நிறுவனத்தினால் மகாபொல நிதியத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், நிதியத்திற்குச் சொந்தமான நிறுவனத்தினால் நிதியத்திற்கு இவ்வாறு நிதியை வழங்கி உரிமையைப் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குரியது என்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

 

இதற்கமைய இதில் தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத அல்லது மோசடியான செயற்பாடுகள் இடம்பெறாது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவல் வலியுறுத்தினார்.

 

இது தொடர்பில், கருத்துத் தெரிவித்த பதவி ரீதியாக நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இதுபோன்ற மோசடிகள் மூடிமறைக்கப்படுவதற்கு இடங்கொடுக்கப் போவதிலலையென்றும், எதிர்காலத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

 

நேர்மையான நோக்கத்திற்காக அரசாங்க நிறுவனமாக ஆரம்பக்கப்பட்ட இந்நிறுவனம் பணிப்பாளர் சபையில் பதவி அடிப்படையில் நியமிக்கப்படும் அரசாங்க அதிகாரிகள் பணியாற்றியதாகவும், காலப்போக்கில் பாரிய அளவில் இலாபமீட்டும் இடமாக இனங்காணப்பட்டதால் ஏற்பட்ட பேராசை காரணமாக இவ்வாறு சட்டரீதியற்ற வகையில், அரசாங்கத்திடமிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது இந்நிறுவனத்தை மாற்றுவதற்கு எதிர்த்த அதிகாரியொருவர் குழுவில் தெரிவித்தார்.

 

இந்த விசாரணைகள் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் ஒரு பல்கலைக்கழகம் வீழ்ச்சியடையக்கூடும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கலாம் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எனினும், SLIIT நிறுவனத்தை அப்படியே பராமரிக்க வேண்டும் என்றும், அதன் பொறுப்பை மகாபொல நிதியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதன் மூலம், அதிகமான மாணவர்கள் மானிய விலையில் பட்டப்படிப்புகளைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

 

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட முக்கியமான பதவிகளில் காணப்பட்ட வெற்றிடங்கள் முறையாக நிரப்பப்படவில்லை என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை கையாளும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை முறையாக நிரப்பத் தவறியது அதன் செயல்திறனின் அடிப்படையில் ஒரு பெரிய பிரச்சினையாகும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

 

மகாபொல நிதியத்தினால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களான நஷனல் வெல்த் கோப்ரேஷன் லிமிடட் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் வரையறுக்கப்பட்ட நாட்வெல்த் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆகியவற்றின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

 

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் நிதியை மீண்டும் முதலீடு செய்வது தொடர்பான பல சிக்கல்கள் இருப்பதால், இது தொடர்பாக தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் இங்கு முடிவு செய்யப்பட்டது.

 

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் மற்றும் புலமைப்பரிசில் ஒன்றைப் பெறுவதற்கு தகைமையான அதிகளவான மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் வழங்குவதற்கான இயலுமை தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. மூலதனமாகக் காணப்படும் சுமார் 20 பில்லியன் ரூபாய் அளவிலான நிதியின் மூலம் கிடைக்கும் வட்டி மற்றும் ஏனைய வருமானங்களை முகாமை செய்து உயர்ந்தளவு நியாயமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

 

இதற்கு மேலதிகமாக 2023இல் ஒப்பந்த அடிப்படையில் 2 வருடங்களுக்கு வர்த்தக கண்காட்சி உத்தியோகத்தர்களை நியமித்தல், நிகழ்நிலை சீட்டிழுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டிழுப்பாளர் அதிலிருந்து விலகியமை காரணமாக நிதியத்துக்கு 750 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடாத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தல் வழங்கியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .