2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

“மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது”: மோடி வேதனை

Editorial   / 2023 ஜூலை 20 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம்” என்று மணிப்பூரில் பெண்களை வீதியில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான சம்பவம் குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்றாவது பெண், அந்த வீடியோவில் இல்லை.

இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

வன்முறை: மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் திகதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தக் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தற்போதுதான் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X