2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது

Editorial   / 2026 மே 19 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


 இலங்கையின் உள்ளூர் கடற்பரப்பில் கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த மே 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 13 மீன்பிடிப் படகுகள், ஒரு டிராக்டர், ஒரு லொறி மற்றும் பெருந்தொகையான தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட திருகோணமலை மார்பிள் முனை, சல்பேஆறு, கிண்ணியா, உப்புரால், கல்லராவ, வட்டவான், பனிச்சங்கேணி, பூனாடி, உலக்காளி, நயாறு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கட்டைக்காடு மற்றும் கல்பிட்டி இப்பன்தீவு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் இந்த அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இச்சுற்றிவளைப்புகளின் போது, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 30 சந்தேக நபர்கள், 13 மீன்பிடிப் படகுகள் மற்றும் ஒரு டிராக்டர் வண்டியுடன் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

 
இதற்கொப்ப, கிண்ணியா பொலிஸாருடன் இணைந்து கிழக்கு கடற்படை கட்டளையினர் கிண்ணியா நகரச் சுற்றுவட்டாரப் பகுதியில் விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, லொறி ஒன்றில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுமார் 219 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்கள் மற்றும் 6 கிலோகிராமுக்கும் அதிகமான தபுவா மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், படகுகள் மற்றும் டிராக்டர் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, கோட்பே, ஈச்சலம்பட்டு, முல்லைத்தீவு, குச்சவெளி, கிண்ணியா, வாழைச்சேனை, மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கிண்ணியாவில் கைப்பற்றப்பட்ட லொறி, பதப்படுத்தப்பட்ட மீன்கள் மற்றும் இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடிச் செயல்களை முற்றாக ஒடுக்குவதற்கும் இவ்வாறான விசேட தேடுதல் நடவடிக்கைகளைக் கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள் எனப் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X