Janu / 2026 மார்ச் 19 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதி ஒழுங்குமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்திவிட்டு, முறையாக பயணித்த மற்றொரு நபரை தலைக்கவசத்தால் (Helmet) தாக்கிய இளைஞர் ஒருவர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸ் பரிசோதகரின் நேரடி தலையீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த சந்தேக நபர் வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிய நகரில் அடிக்கடி நடமாடும் நபர் எனவும், அவருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பெண் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமரவைத்து கொண்டு மீகஹகொட்டுவ சந்தியில் இருந்து பிரதான வீதிக்குள் நுழைய முயன்றுள்ளார். இதன்போது, பிரதான வீதியில் முறையான போக்குவரத்து விதிகளின்படி பயணித்த நடுத்தர வயதுடைய ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மோத சென்று மயிரிழையில் தப்பியுள்ளார்.
இதன்போது ஆத்திரமடைந்த சந்தேக நபர், பிரதான வீதியில் வந்த நபரை வழிமறித்து தனது தலைக்கவசத்தால் (Helmet) கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் அந்த வீதியில் சென்ற கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த 'டாஷ் கேமரா'வில் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் மிகக் குறுகிய காலத்திற்குள் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .