2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘ஆபத்தில் பொருளாதாரம்’

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திலங்க கனகரத்ன

இலங்கையின் பொருளாதாரம், பூகோள பொருளாதாரச் சுட்டிகள் பலவற்றில் கீழிறங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஒன்றிணைந்த எதிரணி, மத்திய வங்கியில் ஊழல்கள் நடைபெறுவதாகவும் அதுவே இதற்குக் காரணமெனவும் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, “புளூம்பேர்க்கின் பூகோள ஆபத்து அறிக்கையிடலிலும் ட்ரான்பரன்ஸி இன்டர்நஷனலின் சர்வதேச ஊழல் சுட்டெண் 2016இலும் பூகோள பட்டினிச் சுட்டெண்ணிலும் ஃபிற்ச் தரப்படுத்தலிலும், இலங்கையின் பொருளாதாரம், பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில், ரூபாயின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்காக, 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள், மத்திய வங்கியால் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டின் இருப்புகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படும் நிலையிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். 

சர்வதேச நிறுவனங்களின் இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதா, இல்லையா என, முதலீட்டாளர்கள் சிந்தித்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். 

“நாட்டின் பொருளாதாரம், பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளமையை, இந்த அறிக்கைகள் காட்டுகின்றன. பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என அரசாங்கம் திரும்பத் திரும்ப சொல்கின்றமைக்கு மத்தியிலேயே இது நடைபெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

நாட்டின் நிலவுகின்ற பொருளாதார நிலைமையைத் தொடர்ந்து, 2.6 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, முதலீட்டாளர்கள் திரும்பப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கு இந்த அரசாங்கமே நேரடிப் பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டினார். 

இந்த ஆபத்தை, அரசாங்கம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதை மறைக்க முயல்வதாகவும், இந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக, நாட்டின் நிலங்களையும் ஏனைய அரச நிறுவனங்களையும் விற்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X