2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் 10 சதவீதம் பூர்த்தியாகவில்லை’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எல்லை மீள்நிர்ணய அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. இன்னும் 10 சதவீதம் மீதமுள்ளது” என, காணி எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்தார். 

எல்லை மீள்நிர்ணயக் குழுவானது, தனது அறிக்கையை டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர், விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கவிருப்பதாக, ஏற்கெனவே அறிவித்திருந்தது.

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை யாரும் எதிர்க்காதுவிடின், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2017இன் முதல் காலாண்டில் நடத்தப்பட முடியும் என்று, அரசாங்கமும் அறிவித்திருந்தது. 

எனினும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, வெளிநாட்டுக்கு சென்றிருப்பதனால், அந்த அறிக்கை, நேற்றையதினம் கையளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கூற்றை ஆணைக்குழுவின் தலைவர் மறுத்துள்ளார். 

“அமைச்சர் இல்லையாயின், இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கலாம். எனினும், எங்களுடைய பணியில் இன்னும் 10 சதவீதம் மீதமிருக்கின்றது’ என்று அசோக பீரிஸ் சுட்டிக்காட்டினார்.  

ஐவர் கொண்ட எல்லை நிர்ணயக் குழுவானது, இவ்வாரத்துக்குள் கூடிய அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது. 

அறிக்கையை மூன்று பகுதிகளாக நாங்கள் பிரித்துள்ளோம். அதில் முதலாவது புத்தகமாகும். இரண்டாவது தொகுதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலாகும். மூன்றாவது எல்லைகளாகும். 

நூற்றுக்கு 10 சதவீதம் மீதமிருக்கின்ற செயற்பாடுகள் நிர்வாகம் தொடர்பிலானதாகும். இந்தப் பிரச்சினை 5 மாவட்டங்களிலேயே நிலவுகின்றது. தமிழ்மொழி பெயர்ப்பு தொடர்பிலும் பிரச்சினைகள் இருக்கின்ற அவற்றுக்கு தீர்வு காணவேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .