2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'பர்தாவையும் தாடியையையும் அகற்றி முஸ்லிம்களின் கலாசாரத்தை அரசாங்கம் மாற்றாது'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

"கலாசார, கலாசாரமாக இலங்கையில் இருந்து வரும் இஸ்லாமியர்களின் உடைகளை மாற்றுவதற்கு, அரசாங்கம் எந்த வகையிலும் உத்தரவு பிறப்பிக்கவில்லை" என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (07) இடம்பெற்றது.

இதன்போது, "முள்ளிப்பொத்தானைப் பாடசாலையொன்றுக்கு, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவர்கள் மற்றும் மாணவிகளை, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர், மாணவிகளின் பர்தா, ஹிஜாப்பை கழற்றி விட்டு வருமாறும், மாணவர்களின் தாடியை எடுத்து விட்டு வருமாறும் பணித்துள்ளனர். இல்லையேல் பரீட்சை எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட உத்தரவா?" என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், "இது அரசாங்கத்தின் முடிவு அல்ல. இது குறித்து நான் கேள்வியுற்றேன். எனினும், முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை. காலாகாலமாக இருக்கும் முஸ்லிம்களின் கலாசாரத்தை அரசாங்கம் மாற்றாது" என்றார்.

மேலும், "கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைக்கு நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் ஆசிரியர்களை, பர்தா அணிய வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக சேலை அணிந்துக்கொண்டு வருமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது" என்றும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, "இது தொடர்பான முறைப்பாடுகளை நீங்கள் எழுதித்தாருங்கள். அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால், இவை அனைத்துக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது அரசாங்கத்தின் செயற்பாடு அல்ல" என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .