2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

'புனர்வாழ்வு பெறாத 275 போராளிகள் உள்ளனர்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பலாலியிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ்

'பாதுகாப்புத் தரப்பினரின் எவ்வித புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகளில் 275 பேர், வடக்கில் உள்ளனர் என்று இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள், தாமாக முன்வந்து சரணடையாத போதிலும், அவர்களால், தேசிய பாதுகாப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை' என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கூறினார்.

பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு  கூறினார். அங்கு உரையாற்றிய அவர், தொடர்ந்து கூறியதாவது,

'யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குறைந்தளவிலேயே உள்ளனர். குறிப்பாக 270 குடும்பங்களே  நாவற்குழி பிரதேசத்தில்  மீள்குடியேறியுள்ளனர்.  யுத்தத்துக்கு முன்னர் அங்கு அதிக சிங்கள மக்கள் இருந்தாலும் அவர்களுக்கு சொந்த வீடுகளோ காணிகளோ இருந்ததில்லை. குத்தகை அடிப்படையிலேயே காணிகள், வீடுகளை அவர்கள் கைவத்திருந்தனர்.

அதிலும் அதிகமானவர்கள், ரயில்வே திணைக்களம் மற்றும் தொழில் ரீதியில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர். இது தான் இங்கு சிங்கள மக்கள் குறைந்தளவில் குடியேறியுள்ளமைக்ககு காரணம்' என்றார்.

'புனர்வாழ் பெறாத முன்னாள் போராளிகள் என 275 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் 55 பெண்கள் அடங்குகின்றனர். இதுவரையில், 2,963பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 615பேர் பெண்களாவர். இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு தான் எமது நோக்கம். அதற்காகவே செயற்படுகின்றோம். ஆயுதக் குழுக்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில், புலனாய்வுப் பிரிவின் ஊடாக அவதானித்து வருகின்றோம். அத்துடன், வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை, ஒருபோதும் அகற்றமாட்டோம்.

யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அதனால்தான், இப்போது போதைப்பொருள், கஞ்சாக் கடத்தல்கள், மதுபாவனை, குற்றச்செயல்கள் போன்றவை அதிகமான இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் அது போதாது. அவை தொடர்பில்,  பொதுமக்களின் நடவடிக்கையில் இரணுவம் தலையிடாது. எனினும் பொலிஸார், எமது உதவியை நாடினால் இராணும் தனது ஒத்துழைப்பை நல்கும்.

வடக்கில், இராணுவம் நிலைகொண்டிருக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில், இங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று, அரசியல்வாதிகள் போடும் கூச்சல், வெறுமனே சர்வதேசத்துக்கானது மாத்திரமாகும்.

வடக்கில் இராணுவத்தின் வசமிருந்த 62 சதவீதமான காணிகள்  விடுவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 7210.98 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 2.7 சதவீத காணிகளிலேயே, இராணுவம் நிலைகொண்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகளில் 87.78 சதவீதமானவை அகற்றப்பட்டுள்ளன. 12.22 சதவீதமாக கண்ணிவெடிகளையே அகற்றவேண்டியுள்ளது' இவை 2019- 2020 ஆண்டளவில் முழுமையாக அகற்றப்பட்டு விடும். இதேவேளை, மயிலிட்டி துறைமுகம் எதிர்காலத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்படும்' என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .