2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'வெடிபொருட்களை பகுப்பாய்வு செய்யவும்'

Thipaan   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை, அரச பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு கட்டளையிட்டார்.

யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான புலனாய்வுப்பிரிவின் உப-பொலிஸ் பரிசோதகர் தர்மசேனவின், முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் இந்துநில், வெடிபொருட்கள் தொடர்பிலான அறிக்கையை நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்தார்.

அறிக்கையின் பிரகாரம், அவ்வீட்டிலிருந்து எஸ்.பீ.ஆர் 024ஃஏ தற்கொலை அங்கி, சீஓ 303, சீஓ 299, சீஓ 290, சீஓ 399 இலக்கங்களை கொண்ட 4 கிளைமோர் குண்டுகள், எஸ்எம்.001, எஸ்எம் 002 ஆகிய இலக்கங்களை கொண்ட காந்தக்குண்டுகள் அடங்கிய இரண்டு பெட்டிகள், 9 மில்லிமீற்றர் வகையைச்சேர்ந்த ரவைகள் அடங்கிய இரண்டு பெட்டிகள் (ஒரு பெட்டியில் தலா 50 இருந்தது), டிஎன்டி அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய இரண்டு பொதிகள், சிலிக்கன் மணல் அடங்கிய இரண்டு பொதிகள் மற்றும் வெடிக்பொருட்கள் சுற்றப்பட்டிருந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதியன்று வெளியான சிங்களப் பத்திரிகையின் இரண்டு பக்கங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த வெடிபொருட்களில், தற்கொலை அங்கி மற்றும் காந்தக்குண்டுகள் என்பன யாழ்ப்பாணம் விசேட படையணியினால் அழிக்கப்பட்டது என்ற அறிக்கையும் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சாவகச்சேரி பொலிஸாரினால், பயங்கரவாத விசாரணைப்பிரிவிடம் கையளித்துள்ளனர் என்றும், கொழும்பில் உள்ள அந்தப் பிரிவுக்கு, அச்சந்தேகநபர் இன்னும் அழைத்துவரப்படவில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 20ஆம் திகதி நடத்தப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .