2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை’

Princiya Dixci   / 2017 ஜனவரி 05 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“ஒவ்வொரு நிறுவனத்துக்கும்,  அமைப்புக்கும் அவர்களது கருத்தைத் தெரிவிக்கும் உரிமை உண்டு. எனினும்,  வெளிநாட்டு நீதிபதிகள் இல்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக்கூறினார்.  

“உள்நாட்டு விசாரணைகளுக்கு தொழிநுட்ப, சட்ட ரீதியான ஆலோசனை வழங்க மாத்திரமே வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வரமுடியும். எனினும், நீதிபதிகள் என்ற ரீதியில் அமர்வதற்கு இலங்கையில் இடமில்லை” என்றார்.  

இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமையன்று அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டது. 

“நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு தேவை என பரிந்துரைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து பார்க்கத் தயாராக உள்ளதா?” என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். 

உள்ளக விசாரணையில் கலப்பு நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க செயலணி முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்கமாட்டோம். 

பரிந்துரைகளை முன்வைத்தாலும் அதனை ஏற்பதா, இல்லையா என்பது பற்றி அமைச்சரவையே இறுதி முடிவை எடுக்கும்.  

சமர்பிக்கப்படுகின்ற அறிக்கைகளில் உள்ள விடயங்களை ஆராயத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், அதிலுள்ள எல்லாவற்றையும் முழுமையாக அமுல்படுத்த முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடமும் தெரிவித்த நிலையில், அதனை அவர் ஏற்றுக்கொண்டார்’ என்றார். 

இதன்போது, ‘ரவிராஜ் வழக்கு மீதான தீர்ப்பையடுத்து, வெளிநாட்டு நீதிபதிகளின் தேவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதே’ என்று ஊடாகவியலாளரொருவர் கேள்வியெழுப்பினார்,  

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் வழக்கு மீதான தீர்ப்பில் எனக்கும் கேள்வியுள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் பேசியுள்ளேன்.  

அது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாகக் கூறினார். இவ்வாறு இலங்கையில் உள்ள சட்டமா அதிபர் கூறுகையில், எதற்காக சர்வதேச நீதிபதிகளின் தலையீடு இலங்கைக்குத் தேவை? என கேள்வியெழுப்பினார். 

“இதில் உங்களுக்கு உள்ள கேள்வி என்ன என்று” ஊடகவியலாளர் கேட்க, “இந்தத் தீர்ப்பின்படி, ரவிராஜை யாரும் கொலை செய்யவில்லை. தானாகவே அவர் சுட்டுக்கொண்டு இறந்தார். அப்படிதானே அர்த்தப்படுகிறது. அதுதான் எனக்குள்ள கேள்வி” என்றார் அமைச்சர் ராஜித. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .