2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘MRக்கும், MSக்கும் வித்தியாசம் இல்லை’

Gavitha   / 2017 ஜனவரி 09 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனனி ஞானசேகரன்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் அமர்ந்து இரண்டு வருடங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கமும், ஹம்பாந்தோட்டையில் தாக்குதலை நடத்தி , தனது உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டிவிட்டது” என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பி கூறினார்.  

பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ​ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,  “தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைத்து நேற்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. ஆனால், அவர்களால் முன்வைப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் இதுவரை நிறைவேற்றப்படாமலே காணப்படுகின்றன.  

 அபிவிருத்தி ரீதியாக, அரசியல் ரீதியாக, எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. மக்களுக்கான நிவாரணங்களை வழங்காமல், வழங்கிய நிவாரணங்களையும் இல்லாது செய்து, வரிக்குமேல் வரி விதித்து, மானியங்களை இல்லாதொழித்து என எல்லா விதத்திலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் தோல்வியையே சந்தித்துள்ளது.  

தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக கூறிய கோரிக்கைகள் ஒன்றைக் கூட இன்னும் இவர்களால் நிறைவேற்றமுடியவில்லை” என்றார். 

 “ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது இந்த அரசாங்கம் தாக்குதலை நடத்தியுள்ளது. நாட்டின் சொத்துகளை குப்பைக்குள் போடும் திட்டத்துக்கு எதிராகவே அம்மக்கள் ஆத்திரமடைந்தார்கள். மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கம் இதேபோல அபிவிருத்தி எனக் கூறியே 11 ஆயிரம் ஏக்கர் காணியை ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து பகிரங்கமாக அபகரித்துக்கொண்டது.  

அ​தேசெயற்பாட்டைத் தான், தற்போதைய இந்த நல்லாட்சி அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றது. இந்த இரண்டு அரசாங்கத்துக்குமிடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இலங்கையில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை மாறுவதை நாமும் எதிர்க்கவில்லை. ஆனால், அதற்காக மக்களின் காணிகளை பறித்து, எதிர்க்கால சந்ததியினரின் சொத்துகளை வெளிநாடுகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட கூடாது. அதனையே நாம் எதிர்க்கின்றோம்” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .