2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மோடிக்கு, தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்

Gavitha   / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்கள் 22 பேரையும் அவர்களது 109 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை, தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். புதுக்கோட்டை மாவட்டம் - கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து, 2 இயந்திரப் படகுகளில் 7 மீனவர்கள், மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கைக் கடற்படையினர், 20ஆம் திகதி அதிகாலை கைது செய்து, படகுகளுடன் இலங்கை காரைநகருக்குக் கொண்டுசென்று, சிறையில் அடைத்துள்ளனர்.

“இந்திய - இலங்கை மீனவர்கள், அமைச்சர்கள் அளவில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மீனவர்கள் கைது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

தமிழகக் கடலோர மாவட்ட மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக, பாக்கு நீரிணைப் பகுதியில், பாரம்பரிய மீன்பிடி உரிமையைக் கொண்டுள்ளனர். அப்பாவியான அவர்களை அச்சுறுத்தும் வகையில், இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், அவர்களைத் தாக்குவதும் தொடர்கிறது.

கச்சதீவை மீட்பது மற்றும் அதில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையைப் பாதுகாப்பதன் மூலம், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். கச்சதீவு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்தியா - இலங்கை கடல் எல்லை விவகாரத்தை, முடிந்துவிட்ட ஒன்றாகக் கருத முடியாது.

“தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், இதுபோன்ற நட வடிக்கைகளைத் திரும்ப பெற வேண்டும் என்ற கருத்தை, தெளிவாக, குழப்பமின்றி, இலங்கைத் தரப்பிடம் மத்திய அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

“மேலும், தற்போது வரை 109 மீன்பிடிப் படகுகள், இலங்கை வசம் உள்ளன. இதுவரை அவை விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம், படகுகளை தொடர்ந்து விடுவிக்காமல் இருப்பது, தமிழக மீனவர்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்து, 22 மீனவர்களையும் 109 படகுகளையையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .