2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வாஸ் உட்பட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 23 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உட்பட அறுவரின் விளக்கமறியலை, பெப்ரவரி 6ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்று (23) உத்தரவிட்டது.

ஆயுத விவகாரம் தொடர்பான இவ்வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் சந்தேகநபரான  இந்திக பமுனுசிங்க எனும் முன்னாள் உப பரிசோதகர், பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் 27ஆம் திகதி நேர்முகத் தேர்வொன்று இடம்பெறவுள்ளதால், அவர் பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றியதற்கான சேவைக்கடிதம் தேவைப்படுவதாக, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க, மன்றில் கோரினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது, அவர் தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் நேர்முகத் தேர்வுக்காக சேவைக் கடிதத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என நீதவானிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆட்சேபணை தெரிவிக்காததையடுத்து, கடிதத்தை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், பட்டம் பெற்றமைக்காக, அவருக்கு பாராட்டையும் தெரிவித்தார்.

கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகரான மொஹமட் ஷியாம் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டு, 2013ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தொம்பே பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன, முன்னாள் உப பரிசோதகர் இந்திக பமுனுசிங்க, கான்ஸ்டபிள்களான காமினி சரத் சந்திர, பிரியங்கர சஞ்ஜீவ, கெலும் ரங்க உள்ளிட்டோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தமை குறிபிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .