2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் காலடிக்குச் சென்று சேவையாற்ற வேண்டும்:மாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் புல்மோட்டை கிராமம்  பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. கல்வி, சுகாதாரம்,விவசாயம், நீர்பாசனம், வீதி, குடிநீர், போக்குவரத்து என பல குறைபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது. இவற்றை நீக்கி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமைப்பாடு கிழக்கு மாகாண சபைக்கு உண்டு என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை மாலை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

குறைபாடுகளுடன் காணப்படும் கிராம மக்களின் குறைகளை களைய வேண்டியது அரசியல்வாதிகளதும், அதிகாரிகளதும் பணியாகும். இதனை நிவர்த்திக்க மக்களின் காலடிக்கு சென்று அக்குறைபாடுகளை நீக்க வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்காக புல்மோட்டையில் ஓர் சகல அலுவலக சேவைகளையும் உள்ளடக்கியதான நடமாடும சேவை ஒன்று நடத்தப்படுவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம், குச்சவெளி, திரியாய், புல்மோட்டை பகுதிகளைச் சேர்ந்த மக்கள நன்மை பெற உள்ளனர்.
மேலும், நாட்டில் கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன.  சகஜ சூழ்நிலையில் வட மாகாணத்திற்கு செல்லும் சுற்றுலா  பயணிகளதும், வியாபாரிகளதும், எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. அத்துடன் பயணிகளதும், வியாபாரிகளதும் நன்மை கருதி தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல்ச் சேவையை  விரைவில் ஆரம்பிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை வேண்டுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் நீலப்பனிக்கன் குளம்  40 மில்லியன் ரூபாய்கள் செலவில் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான நிதியினை உலக விவசாய ஸ்தாபனம் வழங்கி உள்ளது. இதன் மூலம் திரியாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்  3500 ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .