2025 மே 14, புதன்கிழமை

“கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது”

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கன்னியா 99 வருடங்களுக்கு பேரம் பேசப்பட்டு விட்டது ஆனால் யாருடைய கரங்களில் எந்த அரசியல் தலைமையின் கையில் பணம் பரிமாற்றப்பட்டதோ தெரியாது மனவேதனையுடன் நாம் கேட்பது கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது.பறிபோன பின்னரும் அரசியல் யாப்பு திருத்தம் பற்றி எமது அரசியல் தலைமை பேசிக்கொண்டு இருக்கப்போகிறதா?என திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் கேள்வி எழுப்பினார்.

திருகோணமலை சன்சென் ஹோட்டலில் நேற்று (07)நடைபெற்ற திருமலை நவத்தின் இராவண தேசம் நூல் வெளியீட்டு நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

எமது மக்களைக்காக்க, மண்ணைக் காக்க எமது சமயம், கலை கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயம் மொழியைக்காக்க நாம் என்ன செய்கின்றோம்? அரசியல், சமூக, சமய, தலைமைகளின் பணி என்ன?

இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு, மக்கள் நலன் காக்க அரசியல் யாப்பு உண்டு. உள்ளூராட்சித் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று காலத்துக்கு காலம் தேர்தல்கள் வருகின்றன.

நாம் எமக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்கின்றோமா? அல்லது அர்ப்பணிப்போடு மக்கள் பணியை முன்னிறுத்திச் செய்பவர்களைத் தேர்ந்தெடுக்கின்றோமா? கடந்த தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்கள் நம்பிக்கையோடு வாக்களித்தார்கள்.  எதிர்பார்த்தது கிடைக்காவிட்டாலும் தமது உரிமை வாழ்வு, மண் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக வாக்களித்தார்கள். அதிகாரம் கொடுக்கப்பட்டது.என்ன நடந்நது? மக்களுக்கு தேவை இருக்கின்றன. தம்மால் பெற்றுக்கொள்ள முடியாதவைகளை மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கின்றது.

அர்ப்பணிப்போடு மக்கள் நலம் சார்ந்து பணியாற்றுபவர்களை நம்புவோம், முன்னிறுத்துவோம். எமது எதிர்காலமாவது நிம்மதி நிறைந்தாக மகிழ்ச்சி நிறைந்தாக அமையட்டும் என,திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .