பொன் ஆனந்தம் / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள், விடுவிக்கப்படாமல் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் விடுவித்தவற்றுக்கான முறையான ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, கடிதங்களையும் அதற்கான பூரண ஆவணங்களையும், இன்று (18) காலை கையளித்துள்ளனர்.
சம்பூர், கடற்கரைச்சேனைக் கிராமத்தில் உள்ள 3 கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் எழுவர் அடங்கிய குழுவினர், இக்கடிதங்களை மக்கள் சார்பாகச் சேகரித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய செயலகத்தில் கையளித்தனர்.
இவ்விடயம் தொடர்பில், சம்பூர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகநாதன் குறிப்பிடுகையில்,
"சம்பூர் பிரதேசத்திலுள்ள நான்கு முக்கிய காணிப் பிரச்சனைகள் சம்பந்தமான ஆதாரங்கள் அடங்கிய கோவைகள் மற்றும் கடிதங்களை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளோம். அத்துடன், முறைப்பாட்டையும் பதிவுசெய்தோம்.
எங்களுடைய கிராமம் மூன்று கட்டங்களாகக் குடியேற்றப்பட்டது. முதலில் 365 குடும்பங்களும் பின்னர் படிப்படியாக 950 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டன. அதன்போது 818 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கான முறையான ஆவணங்கள் வழங்கப்படவில்லை.
அவற்றை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் இரண்டாவது சாயக்கர வட்டவான் என்ற பகுதியில் கடற்படை கோரியதற்கிணங்க முகாமமைப்பதற்காக, 18 குடும்பங்கள் தமது 40 ஏக்கர் காணியை விட்டுக்கொடுத்தனர்.
அவற்றுக்கான மாற்று ஒழுங்குகள் எவையும் இன்னும் செய்யப்படவில்லை. ஆனாலும் படையினர் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளைப் பிடித்து வைத்துள்ளனர். அவை அனைத்தும் எமது மக்களின் வாழ்வாதாரக் காணிகள்.
மூன்றாவதாக, அனல் மின்னிலையத்துக்கென எடுக்கப்பட்ட, நீர், நிலக்கரி கொண்டுசெல்வதற்கான பாதையமைப்புக்கென 49 குடும்பங்களின் காணிகள் எடுக்கப்பட்டன. அவையும் இன்னும் முறையாக மீளக்கையளிக்கப்படவில்லை. எனினும், மின்னிலையப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, கிளல்வெளி வயல்பகுதியில் சுமார் 200 ஏக்கர் உறுதிக் காணிகளை மின்சார சபை வேலிபோட்டு அடைத்துக் கொண்டிருக்கிறது. அவை, எமது மக்களின் பூர்வீக உறுதிக் காணிகள் அவையும் உடன் நிறுத்தப்பட்டு குறித்த மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
மேற்படி பிரச்சனைகளைத் தெளிவுபடுத்தும் வகையில், ஆயிரத்துக்கும் அதிகமாக ஆவணங்களைச் சேகரித்து அதற்கான தனித்தனியான கடிதங்களையும் இன்று நாம் மனித உரிமைகள் ஆணைக்குளுவிடம் சமர்ப்பித்துள்ளோம்.
எனவே, மேற்படி பிரச்சினைகளை உடன் தீர்க்க நடவடிக்கை எடுத்து, எமது மக்களின் இயல்பான வாழ்வுக்கு வழிசமைக்க வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .