2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கோடி ரூபாய் வர்த்தகருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலையில்  ஒரு கோடி ரூபாய் பணத்துடன் காணாமல் போனதாகக் கூறப்பட்டு, இன்று (07) கைதுசெய்யப்பட்ட எம்.எச்.நஸ்ரினை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை வங்கியின் ஏல விற்பனையில் நகைகளை வாங்குவதற்காக வந்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட, களுத்துறை, பண்டாரகம அட்டுலுகமவைச் சேர்ந்த எம்.எச்.நஸ்ரின் (35 வயது) என்ற வர்த்தகரைக் கைது செய்துள்ளதாகப்பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை- ஹல்துமுல்ல பகுதியில் வைத்தே, திருகோணமலைப் பொலிஸார், அவரைப் புதன்கிழமை (07) அதிகாலை 1 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

13 பேர் கொண்ட குழுவுடன் திருகோணமலைக்குச் சென்றிருந்த போதே அவர் காணாமல் போயுள்ளனர் என்று, அவர் பயணித்த காரின் சாரதியால், திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர், ஞாயிற்றுக்கிழமையன்று காரில் வந்த தன்னுடைய நண்பருடன், 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.40க்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியமை தொடர்பில் தகவல், பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தொலைபேசி இலக்கத்தை வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அது யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி மத்திய நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்றமை கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்த சீ.சீ.டி.வி கமெராக்களை சோதனைக்கு உட்படுத்திய போது, காணாமல் போனதாகக் கூறப்படும் வர்த்தகரான எம்.எச்.நஸ்ரின் பாதுகாப்பாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹல்துமுல்லைக்கு பஸ்ஸொன்றில் சென்று கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்தே, அவரைக் கைதுசெய்துள்ளதாகவும் கடன்சுமையிலிருந்து தப்பித்துகொள்வதற்கே இவ்வாறு தப்பிச்சென்று தலைமறைவாவதற்கு அவர் முயன்றுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வர்த்தகர், வேண்டுமென்றே ஒளிந்திருக்க முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருகோடி ரூபாயை எடுத்துக்கொண்டு திருகோணமலையில் இடம்பெற்ற தங்கநகைகளின் ஏல விற்பனைக்குச் சென்றிருந்தபோதே, தன்னுடைய மகனான எம்.எச்.நஸ்ரின் காணாமல் போய்விட்டதாக, அவருடைய தந்தையும் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

பண்டாரகம வர்த்தகர் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பிஸ்கட் பக்கெட் ஒன்றை, தன்னுடைய கைப்பையில் போட்டுக்கொண்டு திருகோணமலைக்குச் சென்றதாக முக்கியமான சாட்சி கிடைத்துள்ளது. இந்நிலையில், அவர் ஒரு கோடி ரூபாயாயை எடுத்துக்கொண்டு தங்கநகைகளின் ஏல விற்பனைக்குச் சென்றதாக அவருடைய தந்தையினால் கொடுக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், விசாரணைகள் துரிதப்பட்டுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வர்த்தகர், திருகோணமலையிலிருந்து யாழ்;ப்பாணத்துக்கும் அங்கிருந்து வவுனியாவுக்கும் அங்கிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து பதுளை பஸ்ஸில் பெல்மதுளை நோக்கிப் பயணித்துகொண்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கநகை ஏல விற்பனைக்கு அந்த வர்த்தகர் 50 ஆயிரம் ரூபாவை எடுத்துச்சென்றுள்ளதாகவும், வர்த்தகரொருவருக்கு அவர் இரண்டரைக் கோடி ரூபாய் கடன் என்றும் விசாரணைகளிலிருந்து அறியக்கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட வர்த்தகரான எம்.எச்.நஸ்ரினை, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .