2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தை பாதுகாக்க உடன் நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல் தீவு களப்பு  பிரதேசம் சுற்றாடல் ரீதியாக பல பாதிப்புகளை எதிர்நோக்குவதாக, மாவட்டச் செயலாளருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டச் செயலாளர்  ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன, முதல் கட்டமாக மாவட்டச் செயலகத்தில் கடந்த வாரம் விசேட கலந்துரையாலொன்றை ஏற்பாடு செய்தார்.

இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் சகிதம் களப்பு பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோத நிர்மாணிப்புகள், மணல் நிரப்பல் போன்ற செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் நோக்கில்,   குறித்த பிரதேசத்துக்கு நேற்று (22) மாலை கள விஜயமொன்றை, மாவட்டச் செயலாளர் மேற்கொண்டார்.

சில நபர்களால், இக்களப்புக்கு சுற்றாடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை இதன்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்,  அவற்றையெல்லாம் முறியடித்து   இக்களப்பை பாதுகாக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் உடன் மேற்கொள்ளப்படுமெனவும் சகல திணைக்களங்களும்  இதற்காக ஒன்றிணைந்துள்ளனவெனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன், இக்களப்பை அதி  உணர்திறன் மிக்க சுற்றாடல் வலயமாக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கரையோரம் பேணல் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அடையாளம் காணப்பட்ட களப்புக்குரிய பிரதேங்களை வர்த்தமானிப்படுத்தி, பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சாம்பல் தீவு களப்புசார் பிரதேசத்தில் நிர்மாணிப்புகள் உட்பட சகல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான தற்போது கிடைக்கப்பெற்ற அனுமதிக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக உடன் இடை நிறுத்துமாறும் மாவட்டச் செயலாளர்,   உரிய அதிகாரிகளுக்கு இதன்போது ஆலோசனை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X