2025 மே 05, திங்கட்கிழமை

திருகோணமலையில் அபிவிருத்திப் பணிகள்: இம்ரான் எம்.பி வாக்குறுதி

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

துரித கிராமிய வசந்தம்-2020 எனும் திட்டத்தின் மூலம், திருகோணமலை மாவட்டம் முழுவதும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (16) தெரிவித்தார்.

மூதூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "துரித கிராமிய வசந்தம்-2020 என்ற பெயரில், 2020ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு, புதிய அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளேன்.

“இத்திட்டத்தின் மூலம், பல்வேறு அமைச்சுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நிதிகளைப் பெற்று, திருகோணமலை மாவட்டம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் உட்கட்டமைப்பு, பௌதீக, ஆளணி வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன" என்று தெரிவித்தார்.

இதுவரை இந்தத் திட்டத்துக்குப் பல்வேறு அமைச்சுகளில் இருந்து 466.5 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவித்த அவர், அத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள முதற்கட்ட நிதியே இதுவென்றும் தெரிவித்தார்.

“2020 வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு பல அமைச்சுகள் தொடர்ச்சியாக நிதியை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன" என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக, வீடமைப்புத் திட்டங்களுக்காக 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டளவில், மாவட்டம் முழுவதும் 1,500 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், 96 வீதிகளை, கொங்கிரீட் வீதிகளாகப் புனரமைக்க 106.5 மில்லியன் ரூபாயும்; பொழுதுபோக்குப் பூங்காக்கள் அமைக்க 50 மில்லியன் ரூபாயும்; நூலகம், மீனவக் கட்டடங்கள் போன்றவற்றை நிர்மாணிக்க 11 மில்லியன் ரூபாயும்; பாடசாலை மைதான அபிவிருத்திக்கு 44 மில்லியன் ரூபாயும்; மதஸ்தானங்களை புனரமைக்க 5 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X