2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

’பட்டதாரி பயிலுநராக நியமனம் பெற்றவர்களுக்கு அநீதி இழைப்பு’

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.கீத், அப்துல்சலாம் யாசீம்

இவ்வாண்டு மார்ச் மாதம் பட்டதாரிகளாக நியமனம் பெற்றவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டுவருவதாக, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (05) மாலை  நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நியமனம் வழங்க முடியாது எனத் தெரிந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டதாக சாடினார்.

தொடர்ந்துரைத்த அவர், “இவர்களுக்கான பயிற்சி இடைநிறுத்தப்பட்ட போது, வீட்டிலிருந்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவோம் எனப் பிரதமர் கூறினார். அதேபோல், அவர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு வழங்கப்படுமென, ஜனாதிபதி கூறினார். ஆனால், எவ்விதக் கொடுப்பனவும் மார்ச் மாதம் வழங்கப்படவில்லை.

“அதன்பின், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதாகக் கூறினர். அதன்பின், தேர்தல் ஆணையாளர் அவ்வாறு அவர்களைப் பணியில் அமர்த்த முடியாது எனக் கூறியதாகக் கூறி, அதையும் நிறுத்தினர்.

“கடந்த வாரமளவில் பட்டதாரிகளுக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதையும் இடைநிறுத்தியுள்ளனர்.

“இவ்வாறு பயிற்சி வழங்குகிறோம், கொடுப்பனவு வழங்குகிறோம் என அரசாங்கம் கூறுவதும் பின் தேர்தல் ஆணையாளர் அதை இடைநிறுத்துவதுமாக மாறி, மாறி நடப்பதில் பாதிக்கப்படுவது பட்டதாரிகளே.

“எனவே, நாளுக்கு நாள் பட்டதாரிகளை ஏமாற்றாமல், தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி, பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுகொடுக்குமாறு, அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X