2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விவசாயிகளுக்கு இடையூறு விளைவிக்காதீர்: நீதிமன்றம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 10 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார் 

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள தென்னமரவாடி மற்றும் திரியாய் பகுதிகளில், தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகளில், விவசாயிகள் விவசாயம் மேற்கொள்வதற்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பித்துள்ளது.

 இடைக்காலத் தடையுத்தரவை, இன்று (10) பிறப்பித்த திருகோணமலை மேல் நீதிமன்றம், மனு மீதான விசாரணையை, இம்மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 

தமிழ் மக்கள், நூற்றாண்டுகளாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த திரியாய மற்றும் தென்னமரவாடி போன்ற பகுதிகளிலுள்ள விவசாயக் காணிகளை அளந்த தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கற்களையும் நாட்டியிருந்தது.

எல்லைக்கற்கள் நாட்டப்பட்டிருக்கும் காணிகளுக்குள் எவ்விதமான விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென, தொல்பொருள் திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது. அத்துடன், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை தடுக்கும் நடவடிக்கைகளை பொலிஸாரும் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில். இந்த விவகாரம் தொடர்பில், சட்டத்தரணி கிர்சாந்தினி உதயகுமார், மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அவருடைய அறுவுறுத்தலுக்கு அமைய, தாக்கல் செய்யப்பட்ட மனு ஆராயப்பட்டபோது, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் ஆஜராகியிருந்தார். அத்துடன்,  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்தார். 

மனுவை ஆராய்ந்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைக்கு எவ்விதமான இடையூறுகளையும்  விளைவிக்கக்கூடாதென இடைக்கால தடையுத்தரவை விதித்து, மனு மீதான மேலதிக விசாரணையை, இம்மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X