2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'நாதன் ஓடையைப் புனரமைக்க ரூ.120 மில். தேவை'

Thipaan   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

அண்மைய மதிப்பீட்டின் படி, நாதன் ஓடையைப் புனரமைக்க, 120 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் இந்த நிதி இருந்தால், இஸ்திரமாக இப்பணியை நிறைவு செய்து விவசாயிகளுக்குப் பயனளிக்க வைக்க முடியும் எனவும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாதன் ஓடை உடைப்பெடுத்து 6 வருடங்களாவதாகவும் அதனைப் புனரமைத்து, விவசாய நடவடிக்கைகளைச் சீராக மேற்கொள்ள வழி வகுக்குமாறும், ஈச்சிலம்பற்று பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாக, விவசாயிகள், இன்று திங்கட்கிழமை (24) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது,

'2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி உடைந்த இந்த நாதன் ஓடையால், அதிகமான நீர் வெளியாகி, மாரி கால விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஈச்சிலம் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 11 கிராம சேவகர் பிரிவுகளில், 9 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், 4,500 விவசாயக் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன' என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் எம்.தயாபரனிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

' ஏற்கெனவே, இயற்கையாக மகாவெலி கங்கையின் கிளையாற்று நீரை விவசாயத்துக்;கு அளவாக வெளியேற்றி வந்த நாதன் ஓடையானது, தற்போது இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வு, காடழிப்பு போன்றவற்றின் மூலம், இப்போது ஆறு போன்று மாறிவிட்டது.

அதனால் வெருகல் கங்கையால் கடலுக்குச் செல்லவேண்டிய நீர், ஊருக்குள் வருகிறது. மேலும் ஏ-15 வீதி உயர்த்தப்பட்டதால் நீர்வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது.

எனவே, இந்த நாதன் ஓடையை புனரமைக்க நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பல முயற்சிகள் செய்து மணல் மூடைகள் அமைத்த போதும், அது வெற்றியளிக்கவில்லை' என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .