2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புல்மோட்டையிலுள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


புல்மோட்டை பிரதேசத்திலுள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அக்கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இக்கூட்டுத்தாபனத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மேற்படி ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றும் இன்று முற்பகல் நடத்தப்பட்டது.

இதன்போது, கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் டிசான் குணசேகர மற்றும் அரச வளங்கள் மற்றும் உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் வெலிகமகே ஆகியோர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் இடத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேற்படி கூட்டுத்தாபனம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அவர்கள் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டில் 1000 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு இலாபமாகப் பெற்றுக்கொடுத்த நிறுவனம் என்ற பெருமை இந்த கூட்டுத்தாபனத்துக்கு உண்டு. அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பட்டியலில் இந்த கூட்டுத்தாபனம் முதலிடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய இடமளிக்க மாட்டோம். இதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குறிக்கோளுமாகும் என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிசான் குணசேகர தெரிவித்தார்.

அவர்களது உறுதியை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்ட போதிலும் பணிப் பகிஷ்கரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (அமதோரு அமரஜீவ) 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .