Janu / 2026 மே 12 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 'ஏயார்பஸ்' (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (12) அன்று முன்னிலையானார்.
சுமார் இரண்டு மணிநேரம் ஆணைக்குழுவில் தங்கியிருந்த அவர், வாக்குமூலத்தை வழங்கிவிட்டுச் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தேசிய விமானச் சேவைக்கு விமானங்களைக் கொள்வனவு செய்த இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரத்தின் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களின்படி, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு 60 மில்லியன் ரூபாய் பணம் வழங்கப்பட்டதை கபில சந்திரசேன ஒப்புக்கொண்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 2 மில்லியன் அமெரிக்க டொலர் தரகுப் பண விவகாரத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாக்குமூலம் அளிக்கச் செல்வதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "அதிகாரிகளிடமிருந்து நியாயமான முடிவை எதிர்பார்க்கிறேன். ஒரு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டால், நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவேன்" எனத் நம்பிக்கை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வளாகத்தைச் சுற்றிலும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சி ஆதரவாளர்கள் சிலரும் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago