2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா?

Simrith   / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை பற்றி சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நிகழ்த்தப்பட்டது எனும் தொடர்பாக புதிய குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் குறித்து சனல் 4 டிஸ்பாட்ச் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றி சாட்சியாளர் அசாத் மௌலானா பேசியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மௌலானா, தற்பாதுகாப்புப் காரணமாக நாட்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வெளியேறிய பின்னர் இச்சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைக் கொல்ல உத்தரவிட்டதாக குறித்த ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் மௌலானா விவரிக்கிறார்.

மௌலானாவின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்ச ஒருமுறை பிள்ளையானுடனான சந்திப்பின் போது ‘டிரிபோலி படை' என்ற துணை இராணுவ கொலைக் குழுவை உருவாக்க உதவுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.

”அவர் (கோட்டாபய) பிள்ளையானிடம் சிறந்த குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒன்றாக வேலை செய்ய வைக்குமாறு கூறினார். எனவே பிள்ளையான் தனது தேர்வுப்படி சிறந்தவர்களைத் தெரிவு செய்து ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழுவானது பின்னர் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அறிந்து அவர்களைக் கொலை செய்தது” என மௌலானா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சி குறித்த லசந்தவின் தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் முக்கியமாக பெரிதளவில் அறியப்படாத அவர்களின் MiG  இராணுவ ஜெட் பற்றி தனது கட்டுரையில் வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்களால் கோட்டாபய ஆத்திரமடைந்தார். எனவே ஒரு சந்திப்பில் தன்னையும் பிள்ளையானையும் அழைத்து, லசந்தவைக் கொலை செய்யுமாறு தெரித்ததாக மெளாலானா தெரிவித்தார்.

”இந்த நாய் என்னுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது என அவர் சொன்னார். லசந்தவைக் கொல்ல வேண்டும். உன்னால் இயலுமானவரை சீக்கிரம் அதை செய் என அவர் சொன்னார்” என மௌலானா தனது நேர்காணலில் கூறுகிறார்.

அத்துடன், லசந்தவின் படுகொலை பற்றி ஆவணப்படத்தில் ஆதாரமளிக்கின்றார் நாடுகடத்தப்பட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள குற்றப்புலனாய்வு அதிகாரி நிஷாந்த சில்வா. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் லசந்தவின் வழக்கின் புதிய விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த சில்வா, விசாரணையில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தன்னை திரிப்போலி படைப்பிரிவுக்கு கொண்டு சென்றதாக ஆவணப்படத்தில் கூறுகிறார்.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய ஐந்து திரிபோலி படைப்பிரிவு உறுப்பினர்களின் தொலைபேசிகள் மற்றும் அழைப்புத் தள பகுப்பாய்வுடன் கூடிய தொலைபேசி பதிவுகள் லசந்த கொல்லப்பட்ட இடத்துடன் பொருந்தியதாக நிஷாந்த சில்வா கூறுகிறார்.

”எனது ஆய்வின் பிரகாரம் கோட்டாபயவுக்கு திரிபோலி பிரிவுடன் நேரடியான தொடர்பு இருந்தது. மேலும் லசந்தவின் படுகொலை தொடர்பில் சந்தேக நபராக அவரை (கோட்டா) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்த போது, அது தொடர்பில் பேசுவதில் அவர் ஆர்வமாக இருக்கவில்லை”  என நிஷாந்த சில்வா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .