2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியாவின் பெரிய உள்நாட்டு பருவகாலம்: 13 டெஸ்ட்கள்; 6 புதிய மைதானங்கள்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 09 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷுக்கெதிரான தொடர்கள் உள்ளடங்குகின்ற இந்தியாவின் 2016-17 உள்நாட்டு பருவகாலத்தில், ராஜ்கோட், விசாகப்பட்டினம், பூனே, தரம்சாலா, ராஞ்சி, இந்தூர் ஆகியன டெஸ்ட் மைதானங்களான அறிமுகமாகும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இப்பருவகாலத்தில் ஒரு டெஸ்ட் போட்டிக்காக இந்தியாவுக்கு பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ள நிலையில், பங்களாதேஷுக்கு 2000ஆம் ஆண்டு முழுமையான அங்கத்துவம் கிடைத்த பின்னர், அவ்வணி இந்தியாவில் விளையாடும் முதலாவது டெஸ்ட் இதுவாகும். பங்களாதேஷுக்கு முழுமையான அங்கத்துவம் கிடைத்த பின்னர், அவ்வணி, ஏனைய முழுமையான அங்கத்துவம் கிடைத்த நாடுகளில் இறுதியாகவே இந்தியாவுடன் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் போட்டி, ஹைதரபாத்தில் இடம்பெறவுள்ளபோதும் இதற்கான திகதி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

மொத்தத்தில் இந்தியாவின் உள்நாட்டு பருவகாலமானது 13 டெஸ்ட் போட்டிகளையும் எட்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியையும் உள்ளடக்கியுள்ளது. இப்பருவகாலத்தில் இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுகின்ற நிலையில், 1979-80 பருவகாலத்துடன் இணைந்து அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படும் பருவகாலமாக விளங்கவுள்ளது.

முதலாவதாக விஜயம் செய்யும் நியூசிலாந்து, மூன்று டெஸ்ட் போட்டிகளையும் ஐந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் செப்டெம்பர் 23ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளையாடவுள்ளது. இத்தொடரில், இந்தூர், கான்பூர், கொல்கத்தாவில் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், தரம்சாலா, டெல்லி, மொகாலி, ராஞ்சி, விசாகாபட்டினத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அடுத்ததாக வருட இறுதியில் விஜயம் செய்யும் இங்கிலாந்து, ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் மூன்று, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் நவம்பரிலிருந்து ஜனவரி வரை விளையாடவுள்ளது. இத்தொடரில், மொகாலி, ராஜ்கோட், மும்பை, விசாகப்பட்டினம், சென்னையில் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, பூனே, கட்டாக், கொல்கத்தாவில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, பெங்களூர், நாக்பூர், கான்பூரில் இருபதுக்கு-20சர்வதேசப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரானது, நான்கு டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கி, 2017ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து மார்ச் வரை இடம்பெறவுள்ளது. இத்தொடரில், பெங்களூர், தரம்சாலா, ராஞ்சி, பூனேயில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .