2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மின்விளக்குகளை அணைக்க எதிர்ப்பு

Janu   / 2026 ஏப்ரல் 04 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி மின்விளக்குகளை மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை அணைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், ஏப்ரல் 01 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிலையை மோசமாகப் பாதிக்கும் என இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் (CMA) கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமர திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு அந்தச் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

 மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாலை நேரங்களில் வீதி மின்விளக்குகளை அணைப்பது, வீதி விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் விராந்த அமரசிங்க கையொப்பமிட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"வீதிகளில் போதிய வெளிச்சமின்மை காரணமாக வாகன சாரதிகள், குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிடும். அத்துடன், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பதற்கான சூழலையும் இது உருவாக்கும்."

"இதேபோன்றதொரு முடிவு 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டபோதும் நாங்கள் எமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தோம். கடந்த காலங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது கடும்போக்குடன் செயற்பட்ட சில உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள், தற்போது இந்த விடயத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாக உள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் பொலிஸார் தப்பித்துக்கொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் இது அமையும்," என விராந்த அமரசிங்க தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை சேமிப்பதற்கு மின்விளக்குகளை அணைப்பதற்குப் பதிலாக, வீதி சிக்னல் விளக்குகள், அறிவிப்புப் பலகைகள், வீதி மின்விளக்குகள்,  ஆகியவற்றிற்கு சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .