Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று நிறைவுக்கு வந்த உலக இருபதுக்கு-20 தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, சாதனைக்கு மத்தியில் சம்பியன் பட்டம் வென்றிருந்த போதிலும், சர்ச்சைகளுக்குக் குறைவிருக்கவில்லை.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜோ றூட் 54 (36), ஜொஸ் பட்லர் 36 (22) ஓட்டங்களைப் பெற, கிறெய்க் பிறெத்வெய்ட், டுவைன் பிராவோ இருவரும் 3, சாமுவேல் பத்ரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட, பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளையும் கிறெய்க் பிறெத்வெய்ட், ஆறு ஓட்டங்களுக்கு விளாசினார். மார்லன் சாமுவேல்ஸ், கிறெய்க் பிறெத்வெய்ட் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 85 (66), 34 (10) ஓட்டங்களைப் பெற்றனர். டேவிட் வில்லி 3, ஜோ றூட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, இறுதி ஓவரில் 3 பந்துகளும் வீசப்பட்டிருந்த பின்னர், பந்துவீச்சாளரான பென் ஸ்டோக்ஸை நோக்கி, மார்லன் சாமுவேல்ஸ் ஆக்ரோஷமாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது, முன்னர் இடம்பெற்ற சம்பவங்களின் நீட்சி ஆகும். இதற்கு இடம்பெற்ற போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ{ம் மார்லன் சாமுவேல்ஸூம் முரண்பட்டிருந்த நிலையில், இப்போட்டியில், லியம் பிளங்கட்டின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டமிழந்ததாகக் கருதப்பட்டது. மைதானத்தை விட்டு வெளியேறுவதற்காக வெளியே சென்ற சாமுவேல்ஸ், அந்தப் பிடி, சரியான பிடி அல்ல என்பதால் மீள அழைக்கப்பட்டார். அதன்போது, பென் ஸ்டோக்ஸூக்கும் மார்லன் சாமுவேல்ஸூக்குமிடையில் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. அதன் நீட்சியே, இறுதி ஓவரிலும் இடம்பெற்றிருந்தது. போட்டியை வென்ற பின்னர் சாமுவேல்ஸ், தனது மேலாடையைக் கழற்றி வீசிவிட்டு, இங்கிலாந்து அணி வீரர்கள் அமரும் இடத்தை நோக்கிச் சென்று, சைகைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
பென் ஸ்டோக்ஸூக்கு சாமுவேல்ஸ் வெளிப்படுத்திய கருத்துகளுக்காக, அவரது போட்டி ஊதியத்தில் 30 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயம்.
போட்டியின் போது அவ்வாறென்றால், போட்டி முடிவில், அப்போட்டியின் நாயகனாகத் தெரிவான மார்லன் சாமுவேல்ஸ், தனது போட்டியின் நாயகன் விருதை கமராக்களுக்குக் காட்டியபடி, 'இது, ஷேன் வோணுக்காக" என்றார். வழக்கமாக, அன்பால் அல்லது விருப்பத்தால் விருதுகளை அர்ப்பணிப்பது ஒருபுறமிருக்க, இது, ஷேன் வோணுக்கும் சாமுவேல்ஸூக்குமிடையிலான நீண்ட நாள் மோதலின் விளைவாகவே ஏற்பட்டிருந்தது.
போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த அணியின் தலைவர் டெரன் சமி, தங்களது அணியை, மூளைகள் குறைவான அணி என, பிரபல நேர்முக வர்ணனையாளரான மார்க் நிக்கலொஸ் வர்ணித்தமையும் ஆரம்பத்தில் தங்களுக்கான சீருடை கூட இல்லாது இருந்தமையும், தங்களைத் தூண்டியதாகத் தெரிவித்தார். அத்தோடு, தங்களது கிரிக்கெட் சபை, தங்களுக்கான ஒத்துழைப்பை வழங்கியிருக்கவில்லை எனவும் அது தொடர்பாக ஏமாற்றமடைந்துள்ளதாகவும் வெளிப்படையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இவை எல்லாமே, இறுதிப் போட்டியைச் சர்ச்சைக்குரியனவாக மாற்றியிருந்த நிலையில், இந்த உலக இருபதுக்கு-20 தொடரை வென்றதன் மூலம், இக்கிண்ணத்தை இரண்டு தடவைகள் வெற்றிகொண்ட முதலாவது அணி என்ற பெருமையை, மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்றுக் கொண்டது. அதேபோல், இறுதி 4 பந்துகளிலும் ஆறு ஓட்டங்கள் அடிக்கப்பட்டு, போட்டியொன்று வெற்றிகொள்ளப்பட்டது, இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago