2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சாதனையை முறியடித்தார் பிறிஜிட் கொஸ்கெய்

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சிக்காக்கோ மரதனோட்டப்போட்டிப் பட்டத்தைத் தக்க வைத்த கென்யாவின் பிறிஜிட் கொஸ்கெய், பிரித்தானியாவின் போலா றட்கிளிஃப்பேயின் வசமிருந்து பெண்களுக்கான மரதனோட்டப்போட்டி உலக சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த மரதனோட்டப்போட்டியை இரண்டு மணித்தியாலங்கள் 14 நிமிடங்கள் நான்கு செக்கன்களில் கடந்து முதலிடம் பெற்றிருந்த 25 வயதான பிறிஜிட் கொஸ்கெய், 2003ஆம் ஆண்டு இலண்டன் மரதோனோட்டப்போட்டியை இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் 25 செக்கன்களில் கடந்த போலா றட்கிளிஃப்பேயின் சாதனையை முறியடித்திருந்தார்.

இந்நிலையில், ஒஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இனியோஸ் 1:59 சவாலில் 42.2 கிலோ மீற்றர் மரதனோட்டத்தை ஒரு மணித்தியாலம் 59 நிமிடங்கள் 40 செக்கன்களில் கடந்து மரதனோட்டமொன்றை இரண்டு மணித்தியாலத்துக்குள் கடந்த முதலாவது தடகளவீரராக கென்யாவின் 34 வயதான எலியிட் கிப்சோஞ்சே மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பந்தயத்தை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் 51 செக்கன்களில் கடந்த எதியோப்பியாவின் அபபெல் யெஷனெஹ் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்ததோடு, எதியோப்பியாவின் கெலெட்டே புர்கா இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் 55 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

ஆண்களுக்கான பந்தயத்தில் கென்யாவின் 31 வயதான லோரன்ஸ் செரோனோ இரண்டு மணித்தியாலங்கள் ஐந்து நிமிடங்கள் 45 செக்கன்களில் கடந்து முதலிடம் பெற்றிருந்த நிலையில், இரண்டு மணித்தியாலங்கள் ஐந்து நிமிடங்கள் 46 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து எதியோப்பியாவின் டெஜெனெ டெபெல்லா இரண்டாமிடத்தைப் பெற்றிருந்ததோடு, இரண்டு மணித்தியாலங்கள் ஐந்து நிமிடங்கள் 48 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து எதியோப்பியாவின் ஆசீஃபா மெங்ஸ்டு மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .