2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தடையிலிருந்து தப்பித்தார் றபாடா

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளரான கஜிஸோ றபாடா மீது விதிக்கப்பட்டிருந்த இரண்டு டெஸ்ட் போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாள. மறுதினம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கஜிஸோ றபாடா விளையாடவுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துடன் மோதியமைக்காகவே பிரிவு இரண்டில் குற்றஞ்சாட்டப்பட்டு கஜிஸோ றபாடாவுக்கு மூன்று குற்றப் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், குறித்த மூன்று குற்றப் புள்ளிகளுடன் கடந்த 24 மாதங்களில் எட்டு குற்றப் புள்ளிகளை கஜிஸோ றபாடா அடைந்தமையைடுத்தே அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரிவு இரண்டு குற்றத்துக்கெதிரான கஜிஸோ றபாடா செய்த மேன்முறையீட்டு விசாரணை ஆறே முக்கால் மணித்தியாலங்களாக நேற்று இடம்பெற்றிருந்தது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் நடத்தைக் கோவைக்கான மேன்முறையீட்டு ஆணையாளரான மைக்கல் ஹெரோனால் நடத்தப்பட்ட விசாரணை தென்னாபிரிக்க நேரப்படி அன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 3.15க்கே முடிவுக்கு வந்திருந்தது.

குறித்த விசாரணையில் கஜிஸோ றபடா, தென்னாபிரிக்காவின் பிரபல வழக்கறிஞர் டலி மெபு, தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மொஹமட் மூஸஜே, தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டு பிளெஸி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையிலேயே, கஜிஸோ றபாடா மீதான பிரிவு இரண்டு குற்றத்தை பிரிவு ஒன்று குற்றமாகக் குறைத்த மைக்கல் ஹெரோன், போட்டி ஊதியத்தின் 25 சதவீதத்தை அபராதமாக விதித்ததுடன் ஒரு குற்றப் புள்ளியையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த போட்டியின் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணரை ஆட்டமிழக்கச் செய்த பின்னர் மேற்கொண்ட நடத்தைக்காக வழங்கப்பட்டுள்ள ஒரு குற்றப் புள்ளியுடன் சேர்த்து ஏழு குற்றப் புள்ளிகளையே தற்போது கஜிஸோ றபாடா கொண்டுள்ளதால், எட்டுப் புள்ளிகளையடைந்தவுடன் வழங்கப்படும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தடையிலிருந்து தப்பித்தார்.

தனது தீர்ப்பில், சர்வதேச கிரிக்கெட் சபையின் நடத்தைக் கோவையில் கூறப்படும் பொருத்தமற்ற, வேண்டுமென்றதுடன் கஜிஸோ றபாடா ஸ்டீவ் ஸ்மித்துடன் மோதியது ஒத்துப் போகின்றது என்பதில் தான் திருப்தியடையவில்லை என மைக்கல் ஹெரோன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் குறித்த நடவடிக்கை பொறுத்தமற்றது என்று கருதியதாலேயே அபராதத்தையும் ஒரு குற்றப் புள்ளியையும் வழங்கியதாக மைக்கல் ஹெரோன் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .