2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தொடர்கிறது பூனேயின் துரதிர்ஷ்டம்

Shanmugan Murugavel   / 2016 மே 02 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இவ்வாண்டுக்கான குழாம்கள் முடிவுசெய்யப்பட்டபோது, மிகவும் பலமான அணிகளுள் ஒன்றாக, றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி கருதப்பட்டது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி மேல் வெற்றியை வழங்கிய மகேந்திரசிங் டோணி - ஸ்டீபன் பிளமிங் ஜோடியே, இவ்வணிக்கும் முறையே அணித்தலைவராகவும் பயிற்றுநராகவும் இருப்பார்களென்பது அதில் முக்கியமானது.

அவர்களைத் தவிர, வெளிநாட்டு வீரர்களான இங்கிலாந்தின் கெவின் பீற்றர்சன், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டு பிளெஸிஸ், அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் மிற்சல் மார்ஷ் ஆகியோர் உட்பட, வெளிநாட்டு வீரர்களும் அவ்வணிக்குப் பலமாகக் கருதப்பட்டனர்.

ஆனால், 8 போட்டிகளின் நிறைவில் அவ்வணி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெறுமெனவும் அவ்வணியின் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் நால்வரும் ஒரு கட்டத்தில் அணியில் இடம்பெற மாட்டார்களெனவும் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், மேற்குறிப்பிட்ட இரண்டுமே உண்மையாகியுள்ளன.

மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவ்வணி சார்பாக கெவின் பீற்றர்சன் முதலில் வெளியேற, பின்னர் பப் டு பிளெஸிஸ் வெளியேறினார். மிற்சல் மார்ஷ{ம் அண்மையில் வெளியேற, நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டியைத் தொடர்ந்து, ஸ்டீபன் ஸ்மித்தும் வெளியேறியுள்ளார். இவர்கள் நால்வருமே, காயம் காரணமாகவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தடுமாறிவரும் அவ்வணி சார்பாக 7 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித், 45 என்ற சராசரியில் 153.4 என்ற அடித்தாடும் வீதத்தில் ஒரு சதம் உள்ளடங்கலாக 270 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரின் வெளியேற்றம், பூனே அணிக்கு மிகவும் பாதிப்பாக அமையும்.

கடந்த ஒரு வாரமாக, ஸ்மித்தின் வலது மணிக்கட்டில் நோவு இருந்ததாகவும், அது குணமடைந்திருக்கவில்லையெனவும் அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, பூனே அணியுடன் அவுஸ்திரேலியாவின் மருத்துவ குழு இணைந்து, தகவல்களைப் பரிமாறியதாகவும், இறுதியில், இத்தொடரிலிருந்து ஸ்மித்தை விலக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அவருக்கு ஏற்பட்ட உபாதை, பெரியதாக இருக்காது என்றே கருதப்படுகின்ற போதிலும், இம்மாத இறுதியில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக கரீபியன் தீவுகளில் அவுஸ்திரேலிய அணி பங்குபற்றவுள்ள தொடருக்காக அவரைக் குணப்படுத்தும்பொருட்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .