2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியில் வென்றதன் மூலம் 1-0 என தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, மாயங்க் அகர்வாலின் 150, அக்ஸர் பட்டேலின் 52, ஷுப்மன் கில்லின் 44, ரித்திமான் சஹாவின் 27 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 325 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில், 10 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, மொஹமட் சிராஜ் (3), அக்ஸர் பட்டேல் (2), இரவிச்சந்திரன் அஷ்வின் (4), ஜெயந்த் யாதவ்விடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, மாயங்க் அகர்வாலின் 62, செட்டேஸ்வர் புஜாராவின் 47, ஷுப்மன் கில்லின் 47, அக்ஸர் பட்டேலின் ஆட்டமிழக்காத 41, அணித்தலைவர் விராட் கோலியின் 36 ஓட்டங்களோடு 7 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், பட்டேல் 4, றஷின் றவீந்திரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 540 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, இரவிச்சந்திரன் அஷ்வின் (4), ஜெயந்த் யாதவ் (4), அக்ஸர் பட்டேலிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களையே பெற்று 372 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக அகர்வாலும், தொடரின் நாயகனாக அஷ்வினும் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X