Editorial / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரிஸ் செய்ன்ட் ஜேர்மா கழகத்துக்கு அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட, பிரேஸிலின் நேமர் மீது, அவரது முன்னைய கழகமான பார்சிலோனா, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஒப்பந்த விதிகளை மீறினார் எனவும், அதற்காக 8.5 மில்லியன் யூரோக்களை அவர் செலுத்த வேண்டுமெனவும், பார்சிலோனா கோரியுள்ளது.
பார்சிலோனா கழகத்திலிருந்து விலகுவதற்கு 9 மாதங்கள் முன்னதாக, பார்சிலோனாவில் 5 ஆண்டுகள் நீடிப்பதற்கான புதிய ஒப்பந்தத்தில் நேமர் கைச்சாத்திட்ட போது, அவருக்கு வழங்கப்பட்ட மேலதிகக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டுமென, பார்சிலோனா கோரியுள்ளது.
தவிர, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைத் தொடர்ந்து, மேலதிகமாக 10 சதவீதமான பணமும் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததோடல்லாமல், ஸ்பெய்ன் கால்பந்தாட்டச் சம்மேளனத்திலும், முறைப்பாடொன்றை, பார்சிலோனா புரிந்துள்ளது. குறித்த பணத்துக்குப் பொறுப்பேற்க நேமர் மறுத்துவிட்டால், அதற்கான பொறுப்பை, பரிஸ் செய்ன்ட் ஜேர்மா எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அறிக்கையொன்றை வெளியிட்ட நேமரின் பிரதிநிதிகள், இந்த அறிவிப்புத் தொடர்பில் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்தனர். அத்தோடு, இவ்விடயத்தில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், வழக்கை எதிர்த்துச் செயற்படப் போவதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல், அறிக்கையொன்றை வெளியிட்ட பரிஸ் செய்ன்ட் ஜேர்மா கழகம், பொருத்தமான அனைத்துச் சட்டங்களையும், நேமர் பின்பற்றினார் எனவும், பார்சிலோனாவின் நடத்தை குறித்து வருத்தமடைவதாகவும் தெரிவித்தது.
பார்சிலோனா கழகத்திலிருந்து 222 மில்லியன் யூரோக்கள் செலவில், பரிஸ் செய்ன்ட் ஜேர்மா கழகத்தால் வாங்கப்பட்ட நேமர், பார்சிலோனாவிலிருந்து விலகிய பின்னர், பார்சிலோனா கழகப் பணிப்பாளர்கள் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026