2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” முழுப்படமும் இணையத்தில் கசிவு

Editorial   / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

  நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த தணிக்கை வாரியக் குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்புப் படை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதைக் சுட்டிக்காட்டி, அதனை மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பின், ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்யத் தணிக்கை வாரியத்திற்குத் தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. விரைவில் படத்திற்குச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன், மே மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் த.வெ.க. தலைவர் விஜய், எனது ‘ஜன நாயகன்’ படத்திற்குச் சிலர் கூட்டுச் சேர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள்,” எனத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழலில், நேற்று மாலை இத்திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் மர்ம நபர்களால் கசியவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை சுமார் 3 மணிநேரம் ஓடக்கூடிய முழுப்படமும் இணையத்தில் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இச்செயல் அரங்கேற்றப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்களும், தயாரிப்புத் தரப்பும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இணையத்தில் கசிந்த ‘ஜன நாயகன்’ படத்தின் பிரதிகளை அகற்றும் முயற்சியில் படக்குழுவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .