2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பாகிஸ்தான் குழாமிலிருந்து ஷெஷாத், அக்மல், அப்ரிடி நீக்கம்

Shanmugan Murugavel   / 2016 மே 03 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் புதிய பிரதம தேர்வாளராகப் பதவியேற்றுள்ள இன்ஸமாம் உல் ஹக், அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு, ஷகிட் அப்ரிடி, உமர் அக்மல், அஹ்மட் ஷெஷாத் ஆகியோரை, பாகிஸ்தான் குழாமிலிருந்து விலக்கியுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்ற தொடருக்கான பயிற்சி முகாமுக்காக அறிவிக்கப்பட்ட குழாமிலிருந்தே, இவர்கள் மூவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

உலக இருபதுக்கு-20 தொடரிலும் அதற்கு முன்னைய ஆசியக் கிண்ணத் தொடரிலும் பாகிஸ்தான் அணி மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவ்வணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து வக்கார் யுனிஸ் விலகியதோடு, இருபதுக்கு-20 சர்வதேச அணியின் தலைவரான ஷகிட் அப்ரிடியின் பெறுபேறுகள் தொடர்பாகவும் அணித்தலைமை தொடர்பாகவும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். வக்கார் யுனிஸைத் தொடர்ந்து, அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து, ஷகிட் அப்ரிடியும் விலகியிருந்தார்.

இந்நிலையில், இளைய வீரர்களைச் சோதிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள இன்ஸமாம், அதன் காரணமாக ஷகிட் அப்ரிடியைச் சேர்க்கவில்லை எனத் தெரிவித்ததோடு, உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, தன்னை அப்ரிடி நிரூபிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில், இளம் வீரர்களான உமர் அக்மல், அஹ்மட் ஷெஷாத் இருவரும், ஒழுங்கீனம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸமாம் தெரிவித்தார். அத்தோடு, ஒழுகாற்று தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால், கடுமையான முடிவுகள் எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .