2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மனந்திறக்கிறார் டில்ஷான்: 'அமைச்சருடன் பிரச்சினையில்லை'

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 02 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

"விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேரவுடன் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எங்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை" என இலங்கையின் பிரபல துடுப்பாட்ட வீரர், திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுமாறு, திலகரத்ன டில்ஷானுக்கு, அமைச்சர் தயாசிறி கூறியதாக வெளியான செய்தி தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் டுவிட்டர் சமூக வலைத்தளப் பகுதியில் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள டில்ஷான், "விளையாட்டுத்துறை அமைச்சரை, நான் கடந்த மூன்று, நான்கு மாதங்களாகவே சந்திக்கவில்லை. பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிணத்துக்கான போட்டியின் போதே, நான் அமைச்சரை இறுதியாகச் சந்தித்திருந்தேன். அது தவிர, கிரிக்கெட் தொடர்பில் அவருக்கும் எனக்கும் இடையில், எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை." என்றார்.

"இவ்வாறானதொரு நிலையில், அமைச்சருக்கும் எனக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, செய்திகள் வெளியாகியுள்ளமை வருத்தமளிக்கிறது. கிரிக்கெட் மீதும் கிரிக்கெட் வீரர்கள் மீதும் அன்பு செலுத்தும் ரசிகர்கள் இந்நாட்டில் ஏராளமாக உள்ளனர். அவர்களை திசை திருப்பும் வகையில், பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன" என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

"கிரிக்கெட்டைப் பாதுகாத்து, எமது வீரர்களை தொடர்ந்து முன்னிலைக்கு கொண்டுசெல்லல் பற்றியே நாம் பேச வேண்டும். அது பற்றியே சிந்திக்க வேண்டும். அத்துடன், நான் இந்த நாட்டை விட்டு வெளியேறி, அவுஸ்திரேலியாவில் தங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்தியிலும் எவ்வித உண்மையும் இல்லை. தவிர, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறக் கூட நான் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில், என்னைப் பற்றியும் கிரிக்கெட் பற்றியும் வெளியாகியுள்ள இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை நான் முற்றாக மறுப்பதோடு, இவ்வாறான பொய்ச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன். எதிர்வரும் அவுஸ்திரேலியாப் போட்டியில் கலந்துகொண்டு, நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். அதற்கானப் பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றேன். பொய்ப் பிரசாரங்களை, இத்துடன் நிறுத்திக்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று டில்ஷான் மேலும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .