2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

'ஊக்கமருந்துச் சோதனை முடிவுகளை வெளியிடுங்கள்'

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 27 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஊக்கமருந்துச் சோதனைகள் அனைத்தினதும் முடிவுகளைப் பகிரங்கப்படுத்துமாறு, உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபேல் நடால் தெரிவித்துள்ளார். அவர் மீது, பிரான்ஸின் முன்னாள் அமைச்சரொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையிலேயே, இந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியை, காயம் காரணமாக நடால் தவறவிட்டிருந்த நிலையில், அக்காலத்தில் ஊக்கமருந்துச் சோதனையில் அவர் தோல்வியடைந்திருந்ததாகவும், அதை மறைக்கவே அவர், காயமெனப் பொய்யாக நடித்ததாகவும், பிரான்ஸின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் றொசெலைன் பச்செலொட் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவருக்கெதிராக, கடந்த திங்கட்கிழமையே, வழக்குத் தாக்கல் செய்திருந்தார் நடால். இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத் தலைவர் டேவிட் ஹக்கேர்ட்டிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், டென்னிஸின் நடத்தையில் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் கொண்ட விளையாட்டாக மாற வேண்டுமெனக் கோரிய அவர், உலகத்துடன் தொடர்பாடும் நிலைமையை, டென்னிஸூம் டென்னிஸ் சம்மேளனங்களும் மேம்படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.

'தொடர்களின்போதும் தொடர்களில்லாத நேரங்களிலும் நான் எத்தனை தடவைகள் சோதிக்கப்பட்டேன் என்பதை நான் அறிவேன். என்னுடைய எல்லாத் தகவல்களையும் பகிரங்கப்படுத்துங்கள். என்னுடைய உயிரியல் கடவுச்சீட்டையும் ஊக்கமருந்துக் கட்டுப்பாடு, சோதனைகள் தொடர்பான முழுமையான வரலாற்றையும் பகிரங்கமாக்குங்கள்" என அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

நடாலின் கடிதம் கிடைத்துள்ளமை உறுதிப்படுத்திய சர்வதேச டென்னிஸ் சம்மேளனம், எந்தவொரு ஊக்கமருந்துச் சோதனையிலும் நடால் தோல்வியடையவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .