
உலகக் கிண்ண தொடரின் இரண்டாம் நாளில் மூன்று போட்டிகள் நடைபெற்றன. முதற்ப் போட்டியில் மெக்சிகோ அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் 61ஆவது நிமிடத்தில் ஒரிப் பெரால்ட் அடித்த கோலின் மூலமாக மெக்சிகோ அணி வெற்றி பெற்றது. குழு A இற்கான போட்டியாக இந்த போட்டி அமைந்தது. இந்தப் போட்டியின் நாயகனாக டொஸ் சன்டோஸ் தெரிவானார்.
இரண்டாவது போட்டி குழு B இற்கான போட்டி. கடந்த உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஸ்பெயின் மற்றும் நெதர்லான்ட்ஸ் அணிகள் மோதின. நடப்பு சம்பியனும் தரப்படுத்தலில் முதல் இடத்தில உள்ள அணியுமான ஸ்பெயின் அணி நெதர்லான்ட்ஸ் அணியிடம் 1 - 5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சியான மோசமான தோல்வியை சந்தித்தது. 27 வது நிமிடத்தில் பனால்டி உதை மூலம் சபி அலன்சோ ஸ்பெயினின் கோலை அடித்தார். 44 நிமிடத்தில் ரொபின் வன் பேர்சி அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைந்தது. இரண்டாவது பாதியில் 53 வது நிமிடத்திலும், 80 வது நிமிடத்திலும் ஆஜன் ரொபன் இரண்டு கோல்களை அடித்தார். 64 வது நிமிடத்தில் ஸ்டெபான் டி ரிஜ் ஒரு கோலையும், ரொபின் வன் பேர்சி 72 வது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர். போட்டியின் நாயகனாக ரொபின் வன் பேர்சி தெரிவானார்.
மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியா மற்றும் சில்லி அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சில்லி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 12 வது மற்றும் 14 வது நிமிடங்களில் அலெக்சிஸ் சஞ்சே மற்றும், ஜோர்ஜ் வல்டிவியா ஆகியோர் அடித்த கோல்கள் மூலமாக முன்னிலை பெற்றது. 35 வது நிமிடத்தில் ரிம் கெகில் ஆஸ்திரேலியா அணிக்கான கோலைப் பெற்றார். ஜீன் பொஸ்ஜோர் 90 வது நிமிடத்தில் போட்டியின் இறுதி கோலை அடித்தார். அலெக்சிஸ் சஞ்சே போட்டியின் நாயகனாக தெரிவானார்.