2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

IND vs AUS முதல் டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித்

Editorial   / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 50+ ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. அணியின் தலைவர் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். 120 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவர் தனது விக்கெட்டை இழந்தார்.

இந்தப் போட்டி நேற்று (09) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 177 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தை 1 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்கள் எடுத்து நிறைவு செய்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா ஆரம்பித்தனர். இருவரும் 42 ஓட்டங்களுக்கு இணைந்து ஆடினர். அஸ்வின் 62 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.. பின்னர் வந்த புஜாரா, கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் என அனைவரும் விரைந்து தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். மறுமுனையில் ரோகித் நிலைத்து நின்று ஆடி வந்தார்.

7-வது துடுப்பாட்ட வீரராக களம் கண்ட ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்தார் ரோகித். இருவரும் 61 ஓட்டங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9 ஆவது சதத்தை பதிவு செய்தார் ரோகித். 212 பந்துகளில் 120 ஓட்டங்கள் எடுத்து அவர் விக்கெட்டை இழந்தார்.

அவுஸ்திரேலியா அணி தரப்பில் அறிமுக வீரர் மர்பி அபாரமாக பந்து வீசி ராகுல், அஸ்வின், புஜாரா, கோலி மற்றும் கே.எஸ்.பரத் ஆகியோரை வெளியேற்றினார். இரண்டாம் நாள் தேநீர் நேர இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் எடுத்தது.

தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 50+ ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், மூன்றாவது செஷன் துவங்கியதும் ரோகித் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அறிமுக வீரர் கே.எஸ்.பரத்தும் தனது விக்கெட்டை இழந்தார். தற்போது 83.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ஓட்டங்களை இந்தியா எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .