2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மாபெரும் ஊர்வலங்கள்

வா.கிருஸ்ணா   / 2017 மே 24 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்  125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன் தெரிவித்தார்.  

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (23) மாலை நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தரின் ஜனன தினம் மார்ச் 27ஆம் திகதியாகும்.

காலை 6.30 மணிக்கு பட்டிருப்புப் பாலத்தடியிலிருந்தும்   சித்தாண்டிச் சந்தியிலிருந்தும் ஆரம்பமாகும் ஊர்வலங்கள், கல்லடியிலுள்ள சுவாமியின் சமாதியைச் சென்றடையும்.  

பட்டிருப்பில் ஆரம்பமாகும் ஊர்வலமானது களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா ஆகிய பகுதிகள் ஊடாகவும் சித்தாண்டியில் ஆரம்பமாகும் ஊர்வலமானது வந்தாறுமூலை, கொம்மாதுறை, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை ஆகிய பகுதிகள் ஊடாகவும் செல்லும்.  

இதனை அடுத்து, கல்லடி உப்போடையிலுள்ள மணி மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

இந்த ஊர்வலங்கள் வரும் பகுதிகளிலுள்ள மக்கள் அன்றையதினம் வீதிகளைத் துப்புரவு செய்து, தோரணங்களைக் கட்டி, நிறைகுடங்களை வைத்து வரவேற்பு அளிக்குமாறும்; அவர் கேட்டுக்கொண்டார்.

சுவாமி விபுலானந்தர் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் பல விடயங்களை அறியாதவர்களாக உள்ளனர். இதன் காரணமாக சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன தினத்தை விசேட தினமாகக் கொண்டு, இளம் சந்ததியினர் மத்தியில் சுவாமி தொடர்பான விடயங்களைத் தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவரது ஜனன தினத்தை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.  போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .