2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘அதிகாரங்கள் மீளப்பெறாத பொறிமுறையில் அமைய வேண்டும்’

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்

“மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். வழங்கப்படுகின்ற அந்த அதிகாரங்கள், நினைத்த மாத்திரத்தில் மீளப்பெற முடியாத பொறிமுறையில் அமைய வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி றொபர்ட் பி.கில்டனான விசேட சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இக்கலந்துரையாடல், மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இடம்பெற்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினோம்.

“எமது கட்சியால் சமஷ்டி அடிப்படையிலான முன்மொழிவு கூறப்பட்டது.

“பாரம்பரிய வாழிடங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களோடு காணி அதிகாரம் மற்றும் சட்டம் ஒழுங்குடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரம் என்பனவும் வழங்கப்படும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்கின்ற செயற்பாட்டில், எமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

“வரவு - செலவுத்திட்ட விடயம் முடிவடைந்த கையோடு, அரசமைப்பு உருவாக்கும் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு, அரசமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மக்கள் தீர்ப்புக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதில் தாமதங்கள் கூடாது.

“அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணிமனையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். வரவு - செலவுத்திட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது.

“இராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

“காணிகள் விடயத்தில், 1981ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த சட்டவிதிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும். இதனடிப்படையில், புதிதாகக் கொண்டு வரப்பட்ட வனபரிபாலன திணைக்களம், வனசீவராசிகள் சட்டம், தொல்பொருள் ஆய்விடங்கள் தொடர்பான சட்டம், மகாவலி அதிகார சபை தொடர்பான விடயங்கள், கரையோரப் பாதுகாப்புச் சட்டம் என்பன மீள்பரிசீலனை செய்யப்பட்டு, அண்மைக் காலங்களில் அரசாங்கத்துக்குச் சொந்தமாக்கப்பட்ட காணிகள் பழைய நிலைமைக்குக் கொண்டவரப்பட்டு, அவற்றின் மீது மாகாண அரசாங்கத்தின் செயற்பாடு அனுமதிக்கப்பட வேண்டும்.

“இவ்வாறான பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இவை தொடர்பில் தங்கள் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்துமென, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி தெரிவித்தார்” என பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X