2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘அதிகாரப் பகர்தல் மாகாணங்களை பிரிந்து போவதென்று அர்த்தமாகாது’

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்,  எப்.முபாரக் , எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, அப்துல்சலாம் யாசீம்

“அதிகாரப் பகர்தல் என்பது, மாகாணங்களைப் பிரிந்து செல்ல வழிசமைக்கும் என்று அர்த்தமாகாது” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் தற்போது நிலவும் கருத்தாடல் குறித்து இன்று (25) தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

“மாகாணங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படுவதால், நாடு பிரிந்து செல்லும் அபாயமுள்ளது என்று சிலர், மக்களைக் குழப்பமடையச் செய்யும் பொய்யான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான புரிதலாகும்.

“மாகாணங்களுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்டம், நாட்டின் மேன்மைமிகு இறைமையாக கருதப்படும் அரசமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது,

“அவ்வாறாயின் நாட்டின் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு விடயத்தை இவர்கள் எதிர்க்கின்றார்கள் என்றால், இவர்கள் இந்த நாட்டின் உயர்ந்த சட்டத்தை அவமதிக்கின்றார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியதாக உள்ளது.

“தற்போது மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்ப்பவர்கள், முன்னாள் இனவாதிகளான அரசியல்வாதிகளாகவே காணப்படுகின்றனர்.

“மஹிந்த ராஜபக்‌ஷ,‪ கடந்த தேர்தல் மேடைகளில், 'நாம், 13ஆம் திருத்தத்தை விட அதிக அதிகாரங்களை வழங்குவோம்' என முழங்கியிருந்தார்.

“அப்போதெல்லாம் அவர்களுக்கு மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பிரச்சினையிருக்கவில்லை, தற்போது தான் அவர்களுக்கு அது பிரச்சினையாகியுள்ளது.

“அது மாத்திரமன்றி, நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைப்போம் என வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துகளை வெளியிடுவோரே, மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்ப்பதுதான் வேடிக்கையாகவுள்ளது.

“நாட்டுக்குள் அனைத்து இனங்களும் சமமமாக, சகல உரிமைகளையும் வளங்களையும் சமமாக அனுபவிக்கும் விதமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமானால், அவற்றுக்கெல்லாம் அச்சாணியாக அதிகாரப் பகர்தல் அவசியமாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X