Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூ.எல். மப்றூக்
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாகவும், அதனால், அந்தப் பிராந்தியத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களின் தொழில் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மௌலானா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குத் தெரியப்படுத்திய போதும், எவ்விதமான தீர்வுகளும் தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், அக்கரைப்பற்றில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று நடத்தினர். இதில் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டபோதே, இந்த விடயங்களை அவர் தெரிவித்தார்.
"அம்பாறை மாவட்டத்திலிருந்து வாகரையூடாக திருகோணமலை வரையில் ஏராளமான பஸ்கள், பயணிகள் சேவையிலீடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்குப் புறம்பாக - எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் - மேலும் சில பஸ்களுக்கு பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியினை, கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் வழங்கியுள்ளார்" என, தென்கிழக்குக் கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதனால், ஏற்கெனவே சேவையிலீடுபட்டு வரும் பஸ்களின் உரிமையாளர்கள், தமது தொழிலில் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் செயற்பாட்டாளர் எம்.எஸ். பைறூஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ்களும், தனியார் பஸ்களும் இணைந்து, தற்போது ஒன்றிணைந்த பயணிகள் பஸ் சேவையினை நடத்தி வருகின்றதன. இதன்படி இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 14 பஸ்களும், தனியாருக்கு சொந்தமான 21 பஸ்களுமாக, மொத்தம் 35 பஸ்கள், மிக நீண்டகாலமாக சேவையில் ஈடுபடுகின்றன. இங்கு சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கான நேர இடைவெளியாக, 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஒரு நபருக்கு, பயணிகள் பஸ் சேவையில் ஈடுபடுவதற்குரிய இரண்டு பஸ்களுக்கான பாதை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களிடமோ, இலங்கைப் போக்குவரத்து சபையிடமோ சம்மதம் பெறப்படவில்லை. இவ்விடயத்தினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும், கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதாகக் கூறிவருகின்ற முதலமைச்சர், கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் தொழில் விடயத்தில் அலட்சியமாக நடந்துகொள்வதாகவும் இச்சங்கத்தினர் இதன்போது குற்றஞ்சாட்டினர்.
இது விடயத்தில் அவசரமாகத் தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லையேல் எதிர்வரும் காலங்களில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிலைக்குத் தாம் தள்ளப்படுவோம் என்றும் இதன்போது இச்சங்கத்தினர் எச்சரித்தனர்.
7 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago