2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உடன்படிக்கை கைச்சாத்து

Suganthini Ratnam   / 2016 ஜூன் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்

மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு கெம்பஸினுடைய தலைவருமான   எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மலேசியா சென்றுள்ள குழுவினருக்கும் கோலாலம்பூர் பல்கலைக்கழகத்துக்கும்; இடையில் நேற்று வியாழக்கிழமை உடன்படிக்கை ஒன்று  கைச்சாத்திடப்பட்டுள்ளது.  

மருத்துவத்துறை மற்றும் தொழில்நுட்பம், தொடர்புசாதனம் போன்ற துறைகளிலே மிகப் பிரபல்யம் பெற்ற சுமார் 37,000 மாணவர்களை கொண்ட கோலாலம்பூர் பல்கலைக்கழகத்துடன் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

குறிப்பாக கப்பல் துறை, கப்பல் கட்டுவது, கடல் மார்க்கம் சம்பந்தப்பட்ட துறைமுக, விமான பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்ற துறைகளில் இப்பல்கலைக்கழகம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆகவே மருத்துவம் மற்றும் ஊடகத்துறை போன்ற துறைகளுக்கான பட்டப்படிப்பு, மேற்படிப்பு, ஆய்வு போன்றவற்றுக்கான உதவிகளை மட்டக்களப்பு கெம்பஸுக்கு வழங்க கோலாலம்பூர் பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுப்புவதோடு மட்டக்களப்பு கெம்பஸை கட்டியெழுப்ப சகல உதவிகளையும் செய்வதாகவும் உடன்பட்டுள்ளது. அது தொடர்பான உடன்படிக்கை இடம்பெற்றதுடன கோலாலம்பூர் பல்கலைக்கழகம் சார்பாக அதன் தலைவர் பேராசிரியர் டொக்டர் மஸாலிகா முகம்மட்டும் அதன் பிரதித் தலைவர் முகம்மட் ஹிஸாம் பின்  சி அப்துல் கனியும் மட்டக்களப்பு கெம்பஸின் சார்பாக அதன் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும்  அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.எம்.இஸ்மாயிலும்; இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன் மூலம் மட்டக்களப்பு கெம்பஸ் பல்வேறு பட்ட துறைகளில் முன்னேறவும் இவ்வுடன்படிக்கை வழி சமைக்கும் என அதன் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இவ்வாறிருக்க, மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அவரது குழுவினருக்கும் மலேசியாவிலுள்ள இந்திய முஸ்லிம் சமுதாய பேரவையினருக்கும் புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது உரை நிகழ்த்திய டொக்டர் எம்.ஜபருல்கான், "இலங்கைக்கும் மலேசியாவிற்குமிடையிலே இவ்வாறான உறவுகளை ஏற்படுத்துவதில் நாம் பெருமைப்படுகிறோம்.

இலங்கை முஸ்லிம்களுக்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாம் என்றென்றும் உதவி செய்ய ஆயத்தமாக இருக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் வந்து முதலீடு செய்து இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவி செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு உரையாற்றும்போது வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மலேசியா வர்த்தக சம்மேளனமும் கைத்தொழில் சம்மேளனமும், செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையில் இவ்வாறான முதலீடுகளுக்கு உடன்பட வருவதாகவும் இதற்கு அவர்களது ஒத்துழைப்பை நல்குவதாகவும் உறுதிமொழி வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X