கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஜனவரி 31 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் பாரிசவாத நோயினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அடுத்தவரைப் பார்ப்பதை விடவும் உங்களைப் பார்த்துக் கொள்வதே முக்கியமாகும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சிகிச்சைப்பிரிவின் பெறுப்பதிகாரி நரம்பியல் நிபுணர் ரி. திவாகரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தேசிய பாரிசவாத நடை நிகழ்வு தொடர்பில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆராய்வுக் கூட்டத்தில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இவ் ஆராய்வுக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
உடல் ஊனமடைவதற்கு முதலாவது காரணம் பாரிசவாதமாகும், இரண்டாவதாக விபத்துகள் காணப்படுகின்றன. இரத்த அழுத்தம், சக்கரை நோய், உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களினால் பாரிசவாதம் ஏற்படுகிறது.
மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சிகிச்சைப்பிரிவு இயங்கி வருகிறது. இது வரையில் 120க்கும் மேற்பட்டவர்களைக் குணப்படுத்தியிருக்கிறோம் அதில் பாரிசவாதம் ஏற்பட்டு 3 மணி நேரத்துக்குள் எம்மிடம் கொண்டுவரப்பட்டு பூரண குணமடைந்தவர்கள் 30பேர்.
பாரிசவாதம் குணப்படுத்த முடியாத நோய் அல்லது பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பாரிசவாதம் ஏற்பட்டு 3 மணி நேரங்களுக்குள் கொண்டுவரப்படும் ஒருவரைப் பூரணமாகக் குணப்படுத்த முடியும். இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம்.
விபத்து ஏற்பட்டால், நெஞ்சு வலி ஏற்பட்டால் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்வதைப்போல் பாரிச வாதம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மனோநிலை அனைவரிடமும் வர வேண்டும்.

சர்வதேச பாரிசவாத அமைப்பின் ஓர் அங்கமாக இலங்கை தேசிய பாரிசவாத சங்கம் செயற்பட்டு வருகிறது. இச் சங்கம் 2005ஆம் ஆண்டு முதல் பாரிசவாத தினத்தையொட்டி நடை பவனிகளை நடத்தி வருகிறது. கடந்த வருடத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் இந்த நடைபவனி கொழும்பில் நடைபெற்றது. இது இம்முறை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதன்போது, அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவர் என்.மௌலீசன், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சுகுணன் உள்ளிட்டோரும் ஜனாதிபதியின் விஜயம் மற்றும் பாரிச வாதம் தொடர்பில் கருத்துகள் வெளியிட்டனர்.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago